வெளிமாநில தொழிலாளிகளுக்கு 'அம்மா' உணவகத்தில் இலவசம்

தினமலர்  தினமலர்
வெளிமாநில தொழிலாளிகளுக்கு அம்மா உணவகத்தில் இலவசம்

திருவொற்றியூர் : உணவின்றி தவிக்கும், வெளி மாநில தொழிலாளிகளுக்கு, ஆதார் எண்ணை சமர்ப்பித்து, 'அம்மா' உணவகத்தில், இலவச உணவு சாப்பிடலாம் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, 24ம் தேதி, நள்ளிரவு முதல், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சில, அத்தியாவசிய கடைகள் தவிர, மற்ற அனைத்தும் மூடப்பட்டு விட்டன.வெளி மாநிலத்தில் இருந்து, திருவொற்றியூர், மணலி போன்ற பகுதிகளில் தங்கி, தொழிற்சாலைகளில் வேலைபார்க்கும் தினக்கூலிகள் அதிகம்.அவர்கள், உணவின்றி தவிப்பதாக, திருவொற்றியூர் மண்டல அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி, ரேஷன் கார்டு இல்லாமல், உணவிற்கு பணமின்றி தவிக்கும் வெளி மாநில தொழிலாளர்கள், பெயர் மற்றும் ஆதார் எண்ணை, அருகே உள்ள அம்மா உணவகங்களில் பதிவு செய்து, இலவசமாக உணவு பெற்று கொள்ளலாம்.இவ்வாறு, ஒலிபெருக்கி மூலம், திருவொற்றியூர் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் மண்டல அதிகாரி பால் தங்கதுரை, அறிவித்தபடி சென்றார்.

மூலக்கதை