கொரோனாவாவது.. கொண்டைக்கடலையாவது...! அழகிகளுடன் தாய்லாந்து மன்னர் ‘தனிமை’: கொதிப்பில் தாய்நாட்டு மக்கள்

தினகரன்  தினகரன்
கொரோனாவாவது.. கொண்டைக்கடலையாவது...! அழகிகளுடன் தாய்லாந்து மன்னர் ‘தனிமை’: கொதிப்பில் தாய்நாட்டு மக்கள்

பாங்காக்: கொரோனாவுடன் தாய்லாந்து மக்கள் போராடி வரும் நிலையில், அந்நாட்டு மன்னர் ஜெர்மனியில் ஒரு ஓட்டலில் 20 அழகிகளுடன் குதூகலமான வாழ்க்கையை அனுபவித்து வருகிறார். இதற்கு, தாய்லாந்து மக்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.  உலகமும் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், ​​மறுபுறம் தாய்லாந்தின் மன்னர் மகா வஜிரலோங்க்கோர்ன், தனது நாட்டு மக்களை கொரோனா வைரஸ் பீதியின் நடுவில் விட்டுவிட்டு ஜெர்மனிக்குச் சென்றுவிட்டார். இப்போது அவர் ஜெர்மனியில் ஒரு ஆடம்பரமான ஐந்து நட்சத்திர ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ஆனால், அவர் தனிமையில் தனியாக இல்லை. அவருடன் 20 அழகிகள் உள்ளனர். அரண்மனை போன்ற அந்த ஓட்டலுக்கு, அவர் தனது அடிபொடிகள் என பல ஊழியர்களையும் அழைத்துச் சென்றுள்ளார். அதே நேரத்தில், கொரோனாவின் பயம் காரணமாக, அவர் தனது குடும்ப உறுப்பினர்கள் சிலரை திருப்பி அனுப்பியுள்ளார். ‘டெய்லி மெயில்’ பத்திரிகையின் கூற்றுபடி, ‘ராஜா வஜிரலோங்க்கோர்ன் பிப்ரவரி முதல் ஜெர்மனியில் இருந்து வருகிறார். கொரோனா நெருக்கடியை அடுத்து ஜெர்மனியின்  ஆல்பைன் ரிசார்ட்டில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் மன்னர் தனது  ஊழியர்களுடன் தனிமைப்படுத்தியுள்ளார். அவர்,  மாவட்ட கவுன்சிலிடமிருந்து சிறப்பு அனுமதி பெற்று தங்கியுள்ளார்’ என்று தெரிவிக்கிறது. ‘தி வீக்’ என்ற பத்திரிகை, ‘67 வயதான ராஜாவுடன் 20 பெண்கள் மற்றும் ஏராளமான ஊழியர்கள் ஓட்டலில் தங்கியுள்ளனர். வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதைக்  கருத்தில் கொண்டு, அப்பகுதியில் உள்ள ஓட்டல் மற்றும் விருந்தினர்  இல்லங்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், விருந்தினர்கள் ஒரே குழுவாக இருப்பதால் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்’ என்று தெரிவிக்கிறது. கொரோனா வைரஸ் ஜன. 12 முதல் தாய்லாந்தில் பரவி வருகிறது. அதன் பின்னர் இன்றைய நிலையில் 1,524 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 9 பேர் இறந்துள்ளனர், 229 பேர் குணமடைந்துள்ளனர். இப்படி இருக்கையில், மன்னர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட ஜெர்மன் நாட்டில் தற்போது 62,435 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 541 பேர் இறந்துள்ளனர். 52,683 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் மன்னர் ஜெர்மனிக்கு தப்பித்ததில் நாட்டு மக்கள் கோபத்தில் உள்ளனர். சோசியல் மீடியாவிலும் மக்கள் மன்னரை கடுமையாக விமர்சிக்கின்றனர். ‘தாய்லாந்தில் ராஜாவுக்கு என்ன தேவை’ என்ற ஹேஷ்டேக்கை பிரபலப்படுத்தி உள்ளனர். தாய்லாந்தில் இருக்கும்போது, ​​ராஜாவை விமர்சித்தால் அல்லது அவமதித்தால் 15 ஆண்டு சிறைத்தண்டனை உள்ளது. ஆனால், தற்போது அவரை மக்கள் கடுமையாக விமர்சிக்கின்றனர். முன்னதாக ராஜா வஜிரலோங்க்கோர்ன், தனது மெய்க்காப்பாளரை திருமணம் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். திருமணத்திற்குப் பிறகு, அவரது மெய்க்காப்பாளருக்கு ராணி அந்தஸ்து கிடைத்தது. 2014ம் ஆண்டில், மன்னர் வஜிரலோங்க்கோர்ன், சுதிதா என்பவரை துணைத் தளபதியாக்கினார். ராஜா வஜிரலோங்கோர்ன் இதுவரை 3 முறை திருமணம் செய்து கொண்டு, மூன்று மனைவியரிடமிருந்தும் விவாகரத்து பெற்றுக் கொண்டார். ராஜாவுக்கு மொத்தம் 7 குழந்தைகள் உள்ளனர்.

மூலக்கதை