கொரோனா வைரசால் பொருளாதாரம் பாதிப்பு: எம்எல்ஏ.க்கள் சம்பளத்தில் 60% வெட்டு: மகாராஷ்டிரா, தெலங்கானா அரசுகள் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
கொரோனா வைரசால் பொருளாதாரம் பாதிப்பு: எம்எல்ஏ.க்கள் சம்பளத்தில் 60% வெட்டு: மகாராஷ்டிரா, தெலங்கானா அரசுகள் அறிவிப்பு

மும்பை: கொரோனா வைரஸ் பரவலால் மாநில அரசுகளுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்எல்சி.க்களின் (மேலவை உறுப்பினர்கள்) சம்பளத்தில் 60% பிடித்தம் செய்ய மகாராஷ்டிரா மற்றும் தெலங்கானா மாநில அரசுகள் முடிவு செய்துள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா வைரசால் 240க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலால் மாநிலம் முழுவதும் அனைத்து தொழில்களும் முடங்கி போயிருப்பதால் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கவும், கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சையளிக்கவும் தீவிர நடவடிக்கை எடுத்து வரும் அதேவேளையில் பொருளாதார சிக்கலை சமாளிக்கவும் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதன் ஒரு பகுதியாக அனைத்து மக்கள் பிரதிநிதிகள் அதாவது, அனைத்து எம்.எல்.ஏ.க்கள். எம்.எல்.சி.க்களின் சம்பளத்தில் 60 சதவீத தொகையை பிடித்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக துணை முதல்வரும் மாநில நிதியமைச்சருமான அஜித் பவார் நேற்று கூறினார். மேலும், அவர் கூறுகையில், ‘‘இதேபோன்று முதல் நிலை மற்றும் 2ம் நிலை ஊழியர்களின் சம்பளத்தில் 50%, மூன்றாம் நிலை அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 20% பிடித்தம் செய்யப்படும். கடை நிலை ஊழியர்களுக்கு வழக்கமான சம்பளம் வழங்கப்படும்’’ என்றார்.ஆந்திராவில் அனைத்து அரசு துறையில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு 2 கட்டமாக சம்பளம் வழங்க முதல்வர் ஜெகன்மோகன் முடிவு செய்துள்ளார்.தெலங்கானாவில், மகாராஷ்டிரா அரசை போன்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அங்கு, முதல்வர் சந்திரசேகர ராவ் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள்,   அரசு பதவியில் உள்ள  மக்கள் பிரதிநிதிகளுக்கான  சம்பளத்தில் 75%, ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ் போன்ற தேசிய சேவை பணியில் உள்ள அதிகாரிகளுக்கு 60%,  மற்ற அரசு ஊழியர்களுக்கு 50%, 4ம் கட்ட  கடைநிலை ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள்  சம்பளத்தில் 10%, ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்கக்கூடிய பென்ஷன் தொகையில் 50%, நான்காம் கட்ட கடைநிலை ஊழியர்களுக்கான ஓய்வு பென்ஷன் தொகையிலிருந்து 10% பிடித்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை