மீன் சந்தையில் பெண்ணுக்கு ஏற்பட்ட நோய் தொற்று; கொரோனா பாதித்த முதல் நபர் வீ குய்சியன்: சீன செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலால் பரபரப்பு

தினகரன்  தினகரன்
மீன் சந்தையில் பெண்ணுக்கு ஏற்பட்ட நோய் தொற்று; கொரோனா பாதித்த முதல் நபர் வீ குய்சியன்: சீன செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலால் பரபரப்பு

பிஜீங்: சீனாவின் மீன் சந்தையில் பொது கழிப்பறையில் சிறுநீர் கழிக்கச் சென்றபோது பெண் ஒருவருக்கு ஏற்பட்ட நோய் தொற்றுதான், கொரோனாவாக உருவெடுத்ததாகவும், அந்த பெண் நோயாளியின் பெயர் வீ குய்சியன் என்று சீன செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவின் வூஹான் நகரத்திலிருந்து பரவிய கொரோனா வைரஸ் இன்று உலகளவில் மக்களை வதைத்து வருகிறது. இந்நிலையில், சீன செய்தி வலைத்தளமான ‘தி பேப்பரில்’ தற்போது ஓர் அதிர்ச்சி செய்தி வெளியாகி உள்ளது. அதன்படி, சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரஸ் நோய் தொற்றை பரப்பிய நோயாளி (பூஜ்ஜிய அல்லது ஜீரோ நோயாளி) யார்? என்று சர்வதேச நாடுகள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள நிலையில், அந்த முதல் நோயாளி குறித்த தகவல் கிடைத்துள்ளது. இணையதள செய்தி அறிக்கையின்படி, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளி வூஹான் நகரில் உள்ள மீன் சந்தையில் இறால்களை விற்கும் 57 வயதான வீ குய்சியன் என்ற பெண் என்பது தெரியவந்துள்ளது. இவர்தான், முதன்முதலாக கொரோனா வைரஸ் நோயால் முதலில் பாதிக்கப்பட்டார். கிட்டத்தட்ட ஒரு மாத சிகிச்சைக்கு பின்னர், இந்த பெண் முழு ஆரோக்கியமாகி, இன்றும் உயிருடன் இருக்கிறார். நியூயார்க் ஆங்கில செய்தித்தாளான தி வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் வெளியிட்ட தகவலின்படி, ‘வீ குய்சியன் என்ற பெண், கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி இறால் விற்கும் போது ஒரு மீன் சந்தையில் பொது கழிப்பறையில் சிறுநீர் கழிக்கச் சென்றபோது தொற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இதற்குப் பிறகு, அந்தப் பெண்ணுக்கு ஜலதோஷம் ஏற்பட்டுள்ளது. நிலைமை மோசமடைந்ததால் அவர் வூஹானில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 31 டிச. 2019 அன்று வூஹானின் நகராட்சி சுகாதார ஆணையம் முதலில் அந்தப் பெண்ணின் பெயரை வெளிப்படுத்தியது. முதன்முதலில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 27 நோயாளிகளில் வீ குய்சியன் என்ற பெண்ணின் பெயரும் இருந்தது’ என்று குறிப்பிட்டுள்ளது. தற்போது வெளியாகி உள்ள செய்தியால், கொரோனா முதல் நோயாளி குறித்த விவாதம் உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது. வீ குய்சியனின் பெயர் வெளிநாட்டு ஊடகங்களான தி மிரர், நியூஸ்.காம், தி பேப்பர் ஆகியவற்றால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. சில இந்திய செய்தி நிறுவனங்களும் அந்த பெண் குறித்த தகவலை வெளியிட்டுள்ளன. இருப்பினும், சீன அரசாங்கத்தால் இதுவரை அதிகாரப்பூர்வமாக அந்த பெண் குறித்து உறுதிப்படுத்தல் தகவல் எதுவும் வெளியிடவில்லை. அதேநேரத்தில் சில சீன செய்தித்தாள்கள் அமெரிக்காவில் ஒரு ஆய்வகத்தில் வைரஸ் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றன. ஆனால், இந்த வைரஸ் தொற்று குறித்து, அமெரிக்கா ஏற்கனவே சீனாவை குற்றம் சாட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஜீரோ நோயாளி என்றால்...மருத்துவ துறையில் எந்தவொரு நோய்க்கும் முதல் நோயாளியை ‘ஜீரோ நோயாளி’ அல்லது பூஜ்ஜிய நோயாளி என்று அழைக்கிறார்கள். கொரோனா வைரஸ் (கோவிட் -19) நோயால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளியை உலகம் முழுவதும் உள்ள நாடுகள் தேடுகிறது. கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளி வீ குய்சியன் என்பது தற்போது வெளியாகி உள்ளது. இதில் ஆச்சர்யம், அந்த பெண் இன்னும் உயிருடன் இருப்பதுதான் என்று செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.

மூலக்கதை