மெத்தனம்! மதுரையில் கொரோனாவின் வெறியாட்டம்.... சமூக விலகல் அவசியம் உணராத மக்கள்

தினமலர்  தினமலர்
மெத்தனம்! மதுரையில் கொரோனாவின் வெறியாட்டம்.... சமூக விலகல் அவசியம் உணராத மக்கள்

மதுரை : மதுரையில் கொரோனாவின் ஆட்டம் தீவிரமாக துவங்கிய பிறகும் மக்கள் காட்டும் மெத்தனப் போக்கு அதிர்ச்சியளிக்கிறது.

சமூக விலகல், சமூக கோடுகள் பற்றி விழிப்பில்லாததால் பாதிப்பு மோசமான கட்டத்திற்கு செல்லும் அபாயம் உள்ளது.தமிழகத்தில் கொரோனாவிற்கு முதல் பலி மதுரையில் நேர்ந்தது. அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 54 வயது கட்டட ஒப்பந்ததாரர் இறந்தார். அவரது மகன்கள், மனைவிக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிப்பு எண்ணிக்கை இன்னும் உயரும் வாய்ப்புள்ளது. மக்களும், வீட்டு தனிமையில் இருப்பவர்களும் அஜாக்கிரதையை இருந்தால் கொரோனா சமூகப்பரவல் ஆகும் நிலையும் வரும்.

ஊரடங்கு காலத்திலும் மக்கள் பாதிப்படைவதை தவிர்க்க மளிகை, காய்கறி தட்டுப்பாடின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை முறையாக பயன்படுத்த வேண்டும். ஒரு மீட்டர் இடைவெளி கொண்ட சமூக விலகல் கோடுகளில் நின்று தான் பொருட்களை வாங்க வேண்டும். இதை கடைபிடிப்பதில் மெத்தனம் காட்டுகின்றனர். சந்தைகளில் மொத்தமாக கூடுகின்றனர். நெருக்கியடித்து காய்கறி, மளிகை பொருட்களை வாங்குகின்றனர். இதனால் நெல்பேட்டை, கீழமாரட் வீதி, தயிர் மார்க்கெட், வெங்காய மார்க்கெட் மூடப்பட்டன.

இதற்கு மாற்றாக யானைக்கல் தரைப்பாலம், சர்வேயர் காலனி, புதுார், கீழமாசி வீதி, கரிமேடு, தெற்குவெளிவீதி உள்ளிட்ட பகுதிகளில் துவங்கப்பட்ட தற்காலிக சந்தையிலும் மெத்தனப் போக்கை மக்கள் தொடர்கின்றனர். இப்பகுதிகளில் நேற்று கூட்டம் அலைமோதியது. சமூக விலகல் கோடுகள் வரையப்பட்டும் அஜாக்கிரதையாக நெருக்கடியடித்தே காய்கறி வாங்கினர். இதே நிலை தொடர்ந்தால் கொரோனாவின் கொலைவெறியில் இருந்து மதுரை தப்புவது கடினம் தான்.

மூலக்கதை