சாக்கடையில் ஊற்றப்படும் பால்; அரசு கொள்முதல் செய்ய கோரிக்கை

தினமலர்  தினமலர்
சாக்கடையில் ஊற்றப்படும் பால்; அரசு கொள்முதல் செய்ய கோரிக்கை

திருவல்லிக்கேணி : 'கொரோனா' வைரஸ் எதிரொலியால், திருவல்லிக்கேணியில், உற்பத்தி யாளர்களிடமிருந்து, பால் வாங்க யாரும் முன் வராததால், வேறு வழியின்றி, பல்லாயிரம் லிட்டர் பால், தினசரி கால்வாயில் கொட்டப்படுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வாக, அரசே, தங்களிடம் பால் கொள்முதல் செய்ய வேண்டும் என, உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், கூலி தொழிலாளிகள், ஆட்டோ ஓட்டுனர்கள் என, பலரும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து, தவித்து வருகின்றனர். திருவல்லிக்கேணி பால் உற்பத்தியாளர்களும், கொரோனா வைரஸ் எதிரொலியால் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். சென்னையில் பெரும்பாலான ஓட்டல்கள், டீக்கடைகள் மூடப்பட்டுள்ளதால், பால் மொத்த கொள்முதல் இன்றி, தினமும் பல்லாயிரம் லிட்டர் வீணாக, கால்வாயில் கொட்டப்படுகிறது.

இது குறித்து, பால் உற்பத்தியாளர் ராஜி கூறியதாவது:தினசரி உற்பத்தி செய்யப்படும் பாலை, சுற்று வட்டார பகுதிகளில் உள்ள இனிப்பகம், டீக்கடைகளில் விற்பனை செய்து வந்தோம். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, கடைகளை தமிழக அரசு மூடியுள்ளது.இதனால், தினமும் உற்பத்தி செய்யப்படும் பாலை வாங்க, ஆள் இல்லாததால், வேறு வழியின்றி சாக்கடையில் ஊற்றி வருகிறோம். தமிழக அரசு, எங்களிடமிருந்து, பால் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க, மாதம், 3,000 ரூபாய் வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை