வறுமையில் வாடும் மக்களுக்கு வயிறார உணவு வழங்க முதல்வர் முன்வருவாரா?

தினமலர்  தினமலர்
வறுமையில் வாடும் மக்களுக்கு வயிறார உணவு வழங்க முதல்வர் முன்வருவாரா?

வளசரவாக்கம் : சென்னையில், உணவின்றி தவிக்கும் மக்களுக்கு, 'அம்மா' உணவகங்கள் மூலம், இலவச சாப்பாடு வழங்க, அரசு முன்வர வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.

உலக நாடுகளை தொடர்ந்து, நம் நாட்டிலும் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆட துவங்கிஉள்ளது.ஊரடங்குகேரள மாநிலத்தில், முதல் முதலாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தொடர்ந்து, மற்ற மாநிலங்களிலும் இதன் தாக்கம் அதிகரித்தது. இதையடுத்து, பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கும், 24ம் தேதி இரவு முதல், நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

இதனால், மக்கள் வீடுகளில் முடக்கப்பட்டனர். நம் நாட்டை பொறுத்தவரையில், 75 சதவீதம் பேர் தினக்கூலிகளாக உள்ளனர். அந்தந்த மாநில மக்களின் நலனுக்காக, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இந்த வகையில், 'அண்டை மாநிலமான கேரளாவில், பசியால் யாரும் வாடக்கூடாது' என, 'சமூக சமையல் அறை' திட்டத்தை, அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். இதில், யாருக்கெல்லாம் உணவு தேவை என, கணக்கெடுக்கப்பட்டது.பின், அப்பகுதியில் உள்ள பள்ளிகள், சமூக நலக்கூடங்களில், தன்னார்வலர்களுடன் இணைந்து, சமூக சமையல் அறை திறக்கப்பட்டது.

இங்கு உணவு சமைக்கப்பட்டு, தேவைப்படுவோருக்கு வினியோகம் செய்யப்படுகிறது. ஊரடங்கு காரணமாக, பணிக்கு செல்ல முடியாமல் வறுமையில் வாடும் குடும்பங்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள், தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கும் உணவு வழங்கப்படுகிறது.இதைபோல், தெரு நாய், பூனை, குரங்கு ஆகியவற்றுக்கும் உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

'அம்மா' உணவகம்:

தமிழகத்திலும், 144 தடை உத்தரவு காரணமாக, தினக்கூலி வேலை தொழிலாளிகள் போதிய வருமானம் இல்லாத காரணத்தால், உணவின்றி தவித்து வருகின்றனர்.சென்னையில், பணி நிமித்தமாக, அறைகளில் தங்கி உள்ள இளைஞர்களும், இந்த பட்டியலில் வருகின்றனர்.வட மாநிலத்தில் இருந்து வந்து, மதுரவாயல் பகுதியில், 'குல்பி ஐஸ்' விற்பனை செய்யும், 22 பேர் குடும்பத்துடன் உணவின்றி தவித்து வருகின்றனர். கணக்கெடுத்தால், ஒரு நேர உணவுக்கு வழியில்லாமல் தவித்து வருபவர்கள் குறித்த விபரம் தெரிய வரும்.

இந்த சூழ்நிலையில், கேரள மாநிலத்தை போல், பள்ளிகளையும் சமூக நலக்கூடங்களையும் சார்ந்திருக்க தேவையில்லை. காரணம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின் போது ஆரம்பித்த அம்மா உணவகங்கள் நிச்சயம், கைகொடுக்கும்.சென்னையை பொறுத்தவரை, ஒவ்வொரு வார்டிற்கும், இரண்டு அம்மா உணவகங்கள் உள்ளன. ஊரடங்கு மற்றும் சுகாதார பேரிடர் சீராகும் வரை, அம்மா உணவகங்கள் மூலம் உணவின்றி தவிப்போருக்கு சாப்பாடு வினியோகம் செய்யலாம்.

மாநகராட்சியில் பட்ஜெட் பற்றாக்குறை உள்ள நிலையில், இதற்கு தேவைப்படும் பணத்தை பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து பயன்படுத்தலாம்.மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் நோய் தொற்று தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதால், உணவு வழங்கும் பணியை, மாநகராட்சி வருவாய் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கலாம். வார்டு வாரியாக யார் யாருக்கு உணவு தேவைப்படுகிறது எனக் கணக்கெடுத்து, அவர்கள் இருக்கும் பகுதிக்கே, உணவு வினியோகம் செய்தால், அம்மா உணவகங்களில் மக்கள் தேவையின்றி கூடுவதை தவிர்க்கலாம்.

அம்மா உணவகங்கள் இல்லாத தமிழகத்தின் மற்ற பகுதிகளில், சமூக சமையல் அறை திறந்து செயல்படுத்தலாம்.இத்திட்டத்தை, முதல்வர் அறிவித்தால், ஊரடங்கு காலத்தில் அடிப்படை தேவையான உணவு கிடைக்காமல், மக்கள் தவிக்கும் நிலைக்கு தமிழகம் தள்ளப்படாது. நாட்டிற்கு மட்டுமல்லாமல் உலகிற்கே முன்மாதிரியாக திகழலாம்.

மூலக்கதை