கொரோனாவுக்கு எதிரான போர் விளையாட்டு வீரர்கள் நிதியுதவி

தினகரன்  தினகரன்
கொரோனாவுக்கு எதிரான போர் விளையாட்டு வீரர்கள் நிதியுதவி

மும்பை: கொரானா தொற்று தடுப்பு, நிவாரண பணிகளுக்காக திரட்டப்படும் நிதிக்கு நாங்களும் உதவி செய்வோம் என்று இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி தெரிவித்துள்ளார். கொரானா தொற்றை தடுக்க, நிவாரண பணிகளுக்கு  செலவிட நிதி திரட்டும் பணியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன.  பிரதமர் நிவாரண நிதி,  மாநில முதல் அமைச்சர் நிவாரண நிதி என்ற பெயரில்  இந்த நிதி திரட்டப்படுகின்றன. அரசின் கோரிக்கையை ஏற்று பல்வேறு தரப்பினரும் நிதி அளித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக விளையாட்டு பிரபலங்களும் நிதியை அளிக்க தொடங்கியுள்ளனர். பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி 50 லட்ச ரூபாய்க்கு மேற்கு வங்கத்தில்  அரிசி வழங்க உள்ளார். பேட்மின்டன் நட்சத்திரம் பி.வி.சிந்து தலா 5 லட்ச ரூபாயை ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களுக்கு வழங்கி உள்ளார். பிசிசிஐ சார்பில் 51கோடி பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் பிரபலங்கள்  சுரேஷ் ரெய்னா 52 லட்சம்,  சச்சின் டெண்டுல்கர், கவுதம் கம்பீர்  தலா 50 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளனர். இந்நிலையில் கேப்டன்  விராத் கோஹ்லி, அவரது மனைவி அனுஷ்கா சர்மா இணைந்து பிரதமர் நிவாரண நிதி, மகாராஷ்டிரா முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தங்கள் பங்களிப்பை தர உள்ளதாக கூறியுள்ளார். ஆனால் எவ்வளவு தொகை என்ற விவரம் தெரியவில்லை. இதேபோல்  மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா 6 மாத ஊதியத்தையும், தடகள வீராங்கனை ஹிமா தாஸ் ஒரு மாத ஊதியத்தையும் வழங்கப் போவதாக அறிவித்துள்ளனர். துப்பாக்கி சுடும் வீராங்கனை மனு பாக்கர் 1 லட்சத்தை அரியானா அரசிடம் அளித்துள்ளார். மேலும் சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கம்  42லட்சத்தை குஜராத் மாநில நிவாரண நிதிக்கும், 21 லட்சத்தை பிரதமர் நிவாரண நிதிக்கும் வழங்கியுள்ளது. மேற்குவங்க கிரிக்கெட் சங்கம் 25 லட்சத்தை மாநில நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளது.

மூலக்கதை