கோட்டயம் அருகே தடையை மீறி போராட்டம்: தீவிரவாதிகளுக்கு தொடர்பா? போலீசார் விசாரணை

தினகரன்  தினகரன்
கோட்டயம் அருகே தடையை மீறி போராட்டம்: தீவிரவாதிகளுக்கு தொடர்பா? போலீசார் விசாரணை

திருவனந்தபுரம்: கோட்டயம் அருகே வெளிமாநில தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியதில் தீவிரவாதிகளுக்கு தொடர்பு உள்ளதா? என உளவுத்துறை மற்றும் கேரள போலீசார் விசாரணை தொடங்கியுள்ளனர். கேரள மாநிலம் கோட்டயம் அருகே பாய்ப்பாடு பகுதியில் நேற்று முன்தினம் பாய்ப்பாடு சந்திப்பு தேசிய நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் சிலர் கலைந்து சென்றாலும், சிலர் சாலையிலேயே இருந்தனர். இவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். இந்த சம்பவத்தில் சதி இருப்பதாகவும், இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என்றும் கேரள முதல்வர் பினராய் விஜயன் கூறியிருந்தார். இதுகுறித்து கோட்டயம் மாவட்ட எஸ்பி ஜெயதேவ் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் எர்ணாகுளம் சரக ஐஜி மகேஷ்குமார் காளிராஜ் தலைமையில் நேற்று போலீசார் கோட்டயத்தில் விசாரணை நடத்தினர். இதில் 20 நிமிடங்களில் 3,000க்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள் திரண்டது தெரியவந்தது. வாட்ஸ்-அப் ஆடியோ, வீடியோ மூலம் இவர்களுக்கு சிலர் போராட்டம் நடத்த தூண்டியது கண்டுபிடிக்கப்பட்டது. டெல்லி உள்பட சில வட மாநிலங்களில் போராட்டம் நடத்திய தொழிலாளர்களுக்கு வாகன வசதி ஏற்படுத்தப்பட்டது. எனவே இங்கும் போராட்டம் நடத்தினால்தான் ஊருக்கு செல்ல வாகன வசதி கிடைக்கும் என்று இவர்களுக்கு சிலர் வாட்ஸ்-அப் தகவல்களை பரப்பி உள்ளனர்.இதன் மூலம் நாடு முழுவதும் தொழிலாளர்களிடம் போராட்டத்தை தூண்ட சிலர் சதித்திட்டம் தீட்டியிருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதன் பின்னணியில் தீவிரவாதிகளின் சதி இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. இதையடுத்து மத்திய உளவுத்துறை போலீசாரும் கோட்டயத்தில் விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த நிலையில் ஐஜி மகேஷ்குமார் காளிராஜ் தலைமையில் நேற்று கோட்டயத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள முகாம்களில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் வதந்தி பரப்பியதாக கருதப்படும் 20க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

மூலக்கதை