முடக்க காலத்தில் உடல் தகுதியை மேம்படுத்த யோகா செய்யும் வீடியோவை வெளியிட்டார் பிரதமர் மோடி

தினகரன்  தினகரன்
முடக்க காலத்தில் உடல் தகுதியை மேம்படுத்த யோகா செய்யும் வீடியோவை வெளியிட்டார் பிரதமர் மோடி

புதுடெல்லி: தான் யோகா செய்யும் 3டி வீடியோவை பிரதமர் மோடி டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.  சில நாட்களுக்கு முன் நடந்த மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமரிடம், இந்த முடக்க காலத்தில்  நீங்கள் எப்படி உடல் தகுதியை பராமரிக்கிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த மோடி தான் யோகா பயிற்சியில் ஈடுபடுவதாக, இதுகுறித்த வீடியோவை டிவிட்டரில் வெளியிடுவதாகவும் தெரிவித்திருந்தார்.  அதன்படி அவர் யோகா பயிற்சியில் ஈடுபடும் 3டி அனிமேஷன் வீடியோவை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். மேலும், அவர் குறிப்பிடுகையில், ‘‘தான் உடற்பயிற்சி நிபுணரும் அல்ல, யோகா ஆசிரியரும் அல்ல. யோகா பயிற்சியை பின்பற்றும் சாதாரண நபர். சில யோகா ஆசனங்கள் என்னை உடல் தகுதியுடையனாக்கியுள்ளன. இதில் சில டிப்ஸ்கள் இந்த முடக்க காலத்தில் உங்களுக்கு உதவலாம்’’ என குறிப்பிட்டுள்ளார்.  கடந்தாண்டு ஜூன் மாதம் யோகா தினம் கொண்டாடப்பட்டபோதும், பிரதமர் மோடி இது போன்ற யோகா வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்திருந்தார்.  உமருக்கு பாராட்டு: காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் மாமா முகமது அலி மாட்டோ, உடல்நலக் குறைவால் கடந்த ஞாயிறன்று இறந்தார். இத்தகவலை டிவிட்டரில் தெரிவித்த உமர் அப்துல்லா, இந்த முடக்கக் காலத்தில், யாரும் எனது வீட்டுக்கோ அல்லது சமாதிக்கோ வர வேண்டாம். சமூக விலகல் விதிமுறைகளை ஒவ்வொரும் மதிக்க வேண்டும். உங்கள் வீட்டில் இருந்து பிரார்த்தனை செய்யுங்கள். அவரது ஆன்மா சாந்தியடையும்’’ என குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக உமர் அப்துல்லாவை பாராட்டி டிவிட்டரில் பிரதமர் விடுத்துள்ள தகவலில், ‘‘தங்கள் குடும்பத்துக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துக்க நேரத்திலும், கொரோனாவை எதிர்த்து போராட, சமூக விலகலை பின்பற்ற அழைப்பு விடுத்தது பாராட்டுக்குரியது’’ என குறிப்பிட்டுள்ளார்.சமூக நல பணியாளர்களுக்கு வேண்டுகோள்சமூக நல அமைப்பாளர்களுக்கு பிரதமர் நேற்று விடுத்த வேண்டுகோளில், ‘‘நம்பிக்கை என்ற பெயரில், சமூக விலகல் விதிமுறைகளை கண்டுகொள்ளாமல் மக்கள் ஒன்று கூடுகின்றனர். அவர்களுக்கு சமூக விலகல் பற்றி கற்பிக்கவும், கொரோனா பரவாமல் தடுக்கவும் நீங்கள் முக்கிய பங்காற்ற வேண்டும். கொரோனா வைரஸ் பற்றிய தவறான தகவல்கள் மற்றும் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக நீங்கள் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்’’ என கூறியுள்ளார்.

மூலக்கதை