கொரோனா ஊரடங்கால் தொழிலாளர்கள் இடம்பெயர்வதை தடுக்க எடுத்துள்ள நடவடிக்கை என்ன? மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

தினகரன்  தினகரன்
கொரோனா ஊரடங்கால் தொழிலாளர்கள் இடம்பெயர்வதை தடுக்க எடுத்துள்ள நடவடிக்கை என்ன? மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் இடம்பெயர்ந்து செல்வதை தடுக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரிப்பதை கட்டுப்படுத்த மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இதனால் புலம்பெயர்ந்து வந்துள்ள தொழிலாளர்கள் வேலையில்லாமல் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இவர்கள் பல்வேறு நகரங்களில் இருந்து சொந்த கிராமங்களுக்கு கூட்டம் கூட்டமாக இடம்பெயர்ந்து செல்கின்றனர். இதை தடுக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து வழக்கறிஞர்கள் அலாக் அலோக் வத்சவா, ரஷ்மி பன்சால் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுத்தாக்கல் செய்துள்ளனர்.  இந்த வழக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி பாப்டே அமர்வு, ‘‘கொரோனா வைரசை விட இடம்பெயர்ந்து செல்லும் தொழிலாளர்கள் அடையும் அச்சமும் பீதியும் பெரிய பிரச்னையாக உள்ளது. இதை சமாளிக்க மத்திய அரசு ஏற்கனவே சில அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ள நிலையில் நீதிமன்றமும் உத்தரவிட்டு குழப்பத்தை ஏற்படுத்த விரும்பவில்லை. இது தொடர்பாக எந்த உத்தரவை வழங்கும் முன்பும் மத்திய அரசிடம் இருந்து தற்போதைய நிலை குறித்த அறிக்கையை எதிர்பார்க்கிறோம்’’ என தெரிவித்தனர்.அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘கொரோனா வைரசை கட்டுப்படுத்த தொழிலாளர்கள் புலம்பெயர்வதை தடுப்பது மிக அவசியம். இந்த பிரச்னையை தீர்க்க மத்திய அரசும் மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது’’ என தெரிவித்தார். தொடர்ந்து நீதிபதிகள் வழங்கிய உத்தரவில், புலம்பெயரும் தொழிலாளர்களை கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்து இன்று அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்தனர்.கர்நாடக எல்லையை திறக்க கோரி கேரள எம்.பி வழக்குகேரள மாநிலத்தின் காசர்கோடு தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: கேரளாவின் வடபகுதியில் அமைந்துள்ள காசர்கோடு தொகுதி, கர்நாடக மாநிலத்தின் எல்லைகளை பகிர்ந்துள்ளது. மருத்துவ வசதிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் அனைத்துக்கும் காசர்கோடு மக்கள் அருகில் உள்ள கர்நாடகாவின் மங்களூர் மாவட்டத்தை சார்ந்து உள்ளன. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள முடக்கம் காரணமாக கர்நாடக எல்லைகள் மண்ணை ெகாட்டி மூடப்பட்டுள்ளன. ஆம்புலன்சை கூட அனுமதிப்பதில்லை. இதனால் 70 வயது மூதாட்டி உட்பட 2 பேர் ஏற்கனவே இறந்துவிட்டனர். இவ்வாறு எல்லைகள் மூடப்படுவது அரசியல்சானத்தில் 21 மற்றும் 19 டி பிரிவுக்கு எதிரானது. அதனால் கர்நாடக எல்லையை திறக்க உத்தரவிட வேண்டும் என கூறியுள்ளார்.

மூலக்கதை