ஸ்ரீலஸ்ரீ அய்யப்ப சுவாமிகள் ஜீவ சமாதி அடைந்தார்

தினமலர்  தினமலர்
ஸ்ரீலஸ்ரீ அய்யப்ப சுவாமிகள் ஜீவ சமாதி அடைந்தார்

திருவேற்காடு : ஆன்மிக சேவையாற்றி வந்த, 113 வயது ஸ்ரீலஸ்ரீ அய்யப்ப சுவாமிகள், உடல் நலக்குறைவு காரணமாக, நேற்று முக்தி அடைந்தார்.

சென்னை அடுத்த திருவேற்காட்டில் வசித்தவர் ஸ்ரீலஸ்ரீ கருமாரி பட்டர் அய்யப்ப சுவாமிகள், 113. முதுமை மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக, வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி, நேற்று மதியம் இறந்தார்.அவர், தமிழகம் முழுதும், பல கோவில்களுக்கு கும்பாபிஷேகம் செய்து வைத்தவர். திருவேற்காட்டில் ஸ்ரீலஸ்ரீ அய்யப்ப சுவாமிகள் பெயரில், திருமடம் மற்றும் அறக்கட்டளை நிறுவி, அதன் மூலம், 60 ஆண்டுகளாக அன்னதானம் செய்து வந்தார்.

திருவேற்காடு சிவன் கோவில் குளத்தை சீரமைத்தும், பல கோவில்களில் திருப்பணிகள் செய்தும், ஆன்மிக சேவைகள் செய்தவர். மேலும், 44 ஆண்டுகளாக, தஞ்சை பெரிய கோவிலில், ராஜராஜசோழனுக்காக நடக்கும் சதய விழாவில் பங்கேற்றவர்.அவர் ஆற்றிய ஆன்மிக சேவைக்காக, ஆதி கருமாரி பட்டர், அன்னதான சிவம், கலியுக பீஷ்மர் உள்ளிட்ட பல பட்டங்களை பெற்றவர்.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., மற்றும் அரசியல், ஆன்மிகவாதிகள், திரை உலக பிரமுகர்களுக்கு நெருக்கமானவர்.அடுத்த சில தினங்களில், 114வது பிறந்தநாளை கொண்டாட இருந்த நிலையில், அவர் மறைவால், அவரை சார்ந்தோர் மற்றும் பக்தர்கள் துயரத்தில் ஆழ்ந்தனர்.அவரது உடல், திருவேற்காட்டில் உள்ள மடத்தில், பொதுமக்கள், முக்கிய பிரமுகர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவு காரணமாக, அவரது உடல் நல்லடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டு, அங்குள்ள ஆதி கருமாரியம்மன் கோவில் பின்புறம், ஜீவ சமாதி அமைக்கப்பட்டது.

மூலக்கதை