வாடகை செலுத்தாதவரை வெளியேற்றக் கூடாது: அமைச்சர் எச்சரிக்கை

தினமலர்  தினமலர்
வாடகை செலுத்தாதவரை வெளியேற்றக் கூடாது: அமைச்சர் எச்சரிக்கை

சென்னை ; ''விடுதிகளில் தங்கியிருப்பவர்கள், வாடகை செலுத்தாவிட்டால், அவர்களை வெளியேற்றக் கூடாது. அப்படி செய்தால் விடுதிக்கு, 'சீல்' வைக்கப்படும்,'' என, மீன்வளத்துறை அமைச்சர், ஜெயகுமார் கூறினார்.

சென்னை நகரில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, அமைச்சர் ஜெயகுமார், நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடத்தினார். மாநகராட்சி கமிஷனர், பிரகாஷ், மாவட்ட கலெக்டர், சீதாலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதன்பின், அமைச்சர் ஜெயகுமார் அளித்த பேட்டி: சென்னையில், 26 ஆயிரம் வீடுகள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளன. இதுவரை, 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கை மீறி சுற்றுபவர்கள், 14 நாட்கள் தனிமை அறையில் அடைக்கப்படுவர். கோயம்பேடு மார்க்கெட் பகுதியை தவிர்த்து, மற்ற மார்க்கெட், திறந்த வெளியில் செயல்பட, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

ஊரடங்கை பயன்படுத்தி, உணவு பொருட்களை பதுக்கினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.அதேபோல், சென்னையில் உள்ள விடுதிகளில் தங்கியிருப்போர், வாடகை செலுத்த முடியவில்லை என்றால், விடுதிநிர்வாகம், அவர்களை வெளியேற்ற கூடாது.அவ்வாறு வெளியேற்றினால், விடுதிக்கு மாநகராட்சி சார்பில், சீல் வைக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை