ரூ.24 ஆயிரம் கோடி! இலக்கை எட்டாத நிதியாண்டு நிறைவு: திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கவலை

தினமலர்  தினமலர்
ரூ.24 ஆயிரம் கோடி! இலக்கை எட்டாத நிதியாண்டு நிறைவு: திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கவலை

திருப்பூர்:-கொரோனாவால், 2019--20ம் நிதியாண்டுக்கான திருப்பூரின் ஆடை ஏற்றுமதி வர்த்தகம், ரூ. 24 ஆயிரம் கோடியுடன், இலக்கை எட்டாமல் நிற்கிறது.திருப்பூரின் ஆடை ஏற்றுமதி வர்த்தகம், கடந்த 2016 -- 17ம் நிதியாண்டில், 26 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியது. பணம் மதிப்பு மறு சீரமைப்பு, ஜி.எஸ்.டி., அறிமுகம் காரணமாக, 2017-18ல், 24 ஆயிரம் கோடியாக சரிந்தது. மீண்டும் எழுச்சி பெற்று, 2018-- 19ல், 26 ஆயிரம் கோடியை தொட்டது.
நடப்பு, 2019--20ல், முதல் இரண்டு மாதங்களில் சிறப்பான வளர்ச்சியுடன் துவங்கிய திருப்பூரின் ஏற்றுமதி, அடுத்தடுத்த மாதங்களில் குறையத்துவங்கியது. கடந்த பிப்., வரையிலான நிதியாண்டின் 11 மாதங்களில், ஏற்றுமதி 23,185 கோடியை எட்டியது.சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், அமெரிக்கா, ஐரோப்பா உட்பட உலகளாவிய நாடுகளில் பரவியுள்ளது; இம்மாத முதல், நமது நாட்டிலும் பரவத்துவங்கிவிட்டது.
இதனால், அமெரிக்கா, ஐரோப்பா நாட்டு வர்த்தகர்கள், திருப்பூர் நிறுவனங்களுக்கு வழங்கிய ஆர்டர்களை ரத்து செய்துவிட்டனர்.ஏற்கனவே தயாரித்து அனுப்பிய ஆடைக்கான தொகையும் வழங்கவில்லை. வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை, கடந்த 24ம் தேதி முதல் ஆடை உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.இன்றுடன், 2019--20ம் நிதியாண்டு முடிவடைகிறது. உற்பத்தி நிறுத்தம்; ஏற்றுமதி பாதிப்பு, வெளிநாடுகளுக்கு அனுப்பிய ஆடைகளுக்கான தொகை பெறமுடியாததால், எதிர்பார்த்த 26 ஆயிரம் கோடி வர்த்தகம் எட்டாக்கனியாகிவிட்டது.
ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறியதாவது:கொரோனாவால், இந்த நிதியாண்டுக்கான திருப்பூரின் மொத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், 24 ஆயிரம் கோடியையே எட்டமுடிந்துள்ளது. ஒவ்வொரு நிதியாண்டு நிறைவடையும்போதும், அடுத்த நிதியாண்டுக்கால இலக்கு நிர்ணயிக்கப்படுவது வழக்கம்.
கொரோனா பாதிப்புகள் விலகி, வர்த்தகம் எப்போது எழுச்சி பெறும் என்பது கணிக்கமுடியாத நிலையில் உள்ளது. எனவே, 2020-- 21ம் நிதியாண்டுக்கான இலக்கை தற்போது, நிர்ணயிக்க முடியாது. மத்திய, மாநில அரசுகள், தொழில்மேம்பாட்டுக்கான திட்டங்களை உருவாக்கவேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை