நடமாடும் சந்தை! நடைமுறைக்கு வர வேண்டும் மக்களை முடக்க இதுவே வழி

தினமலர்  தினமலர்
நடமாடும் சந்தை! நடைமுறைக்கு வர வேண்டும் மக்களை முடக்க இதுவே வழி

கோவை:கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், இறைச்சி, காய்கறி மார்க்கெட்டில் மக்கள் திரள்வதை தடுக்க, மொபைல் சந்தை நடைமுறையை, அமலுக்கு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடு களில் இருந்து திரும்பியுள்ள, 4 ஆயிரத்து 483 பேரில் சிலரது முகவரியை தேடி போலீசார் அலைந்து வருகின்றனர்.தனிமைப்படுத்தப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வீடுகளில் இருப்போர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இத்தொற்று பரவாமல் தடுக்க, போலீசாரும், மாவட்ட நிர்வாகமும், திணறி வருகின்றனர்.
இச்சூழலை உணராமல், தனிமனித பொறுப்புணர்வு இல்லாமல், நேற்று முன்தினம், குடும்பம் குடும்பமாக பலரும் மீன்மார்க்கெட், சந்தைகளில் திரண்டது, மருத்துவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரை பணயம் வைத்து சிகிச்சை அளித்து வரும், மருத்துவர்களுக்கு ஒத்துழைப்பு தராமல், பலரும் வீதிகளில் சுற்றித் திரிகின்றனர்.பிரதமர் மோடி உருக்கமான வேண்டுகோள் விடுத்தும், சுய கட்டுப்பாடு இல்லாமல் இருக்கும் பொதுமக்களுக்கு, தற்போதைய அத்தியாவசிய தேவை உணவா அல்லது உயிரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இச்சூழலை கட்டுப்படுத்தாவிடில், கோவையில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, சில கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் விதிக்க வேண்டியது அவசியம்.n அனைத்து இறைச்சி கடை களையும் மூட உத்தரவிடலாம். உக்கடம் மீன் மார்க்கெட், லாரி பேட்டை உள்ளிட்ட, இறைச்சிக்கூடங்களை தற்காலிகமாக மூட அறிவுறுத்தலாம். உழவர் சந்தைகள், உக்கடம், காந்திபுரம், மேட்டுப்பாளையம் ரோட்டிலுள்ள ஊட்டி பஸ் ஸ்டாண்டுகளில், தற்காலிகமாக செயல்படும் சந்தைகளை மூட வேண்டும்.
இதற்கு பதிலாக, விவசாயிகளிடம் மொத்தமாக காய்கறி கொள்முதல் செய்து, டெம்போ, லாரிகள் வாயிலாக, அந்தந்த பகுதிகளுக்கே, குறிப்பிட்ட நாட்கள் மட்டும் கிடைக்க ஏற்பாடு செய்யலாம்.இதன் வாயிலாக மட்டுமே, பொது இடங்களில் கூட்டம் கூடுவதையும், அதன் வாயிலாக கொரோனா வைரஸ் தொற்றுவதையும் தவிர்க்க முடியும்.

மூலக்கதை