வாசனை, சுவை அறியும் திறன் இழப்பும் கொரோனா வைரஸ் தாக்கத்தின் அறிகுறிகள் தான் : அமெரிக்க காது, தொண்டை நோயியல் அகாடமி தகவல்

தினகரன்  தினகரன்
வாசனை, சுவை அறியும் திறன் இழப்பும் கொரோனா வைரஸ் தாக்கத்தின் அறிகுறிகள் தான் : அமெரிக்க காது, தொண்டை நோயியல் அகாடமி தகவல்

சென்னை:கொரோனா வைரஸ் பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கான புதிய வழிமுறைகளை அமெரிக்க காது, தொண்டை நோயியல் அகாடமியின் தலைமை செயல் அதிகாரியான ஜேம்ஸ் டென்னி வெளியிட்டுள்ளார். உலகின் பல்வேறு நாடுகளில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய் தொற்று, உலகம் முழுவதும் 34,000 உயிர்களை பலி வாங்கி உள்ளது. சுமார் 7 லட்சத்திற்கும் மேற்பட்டோரை கொரோனா தொற்று பாதித்துள்ளது. கொரோனா வைரஸ் கோவிட்-19 தொற்றானது மூக்கு மற்றும் தொண்டை உள்ளிட்ட மேல் சுவாசக்குழாயில் இருக்கும் போது மட்டுமே அது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதுவே, கீழ் சுவாசக்குழாயை தாக்கும் போது சிக்கல்கள் ஏற்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நயவஞ்சக வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்க உலக மருத்துவ வல்லுநர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.கொரோனாவால் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகுபவர்கள், உயிரிழப்பவர்கள் அனைவரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இருதய நோய், நாள்பட்ட சுவாச நோய் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் என அறிக்கை ஒன்று சுட்டிக்காட்டுகிறது.இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கான புதிய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்டவை கொரோனா வைரஸ் தாக்கத்தின் அறிகுறிகளாக சொல்லப்பட்டு வருகிறது. ஒருவருக்கு ஒவ்வாமை, சைனஸ் அல்லது சளி போன்ற பிரச்சினைகள் ஏதுமின்றி பொருட்களை முகர்ந்தால் மணம் தெரியாமல் போனாலும், உணவுகளை சுவைத்தால் நாக்கில் சுவை தெரியாமல் போனாலும் அது கொரோனா வைரஸின் ஆரம்பகால அறிகுறிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்க காது, தொண்டை நோயியல் அகாடமியின் தலைமை செயல் அதிகாரியான ஜேம்ஸ் டென்னி இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இந்த அறிகுறிகள் இருந்தால் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தனிமைபடுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை