யாரிடமும் கொரோனா வைரஸ் இருக்கலாம்! இது தெரியாமல் கடைகளில் முண்டியடிப்பது ஏன்?

தினமலர்  தினமலர்
யாரிடமும் கொரோனா வைரஸ் இருக்கலாம்! இது தெரியாமல் கடைகளில் முண்டியடிப்பது ஏன்?

கோவை:கொரோனா வைரஸின் தீவிரத்தை உணராமல், சமூக இடைவெளியின்றி, இறைச்சி, மளிகை கடைகளில் மக்கள் திரள்வதை கண்டு, வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தடை உத்தரவு காலம் வரை, மீன் விற்பனையை நிறுத்த ஆலோசித்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் தடுக்க, சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்று, பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி உள்ளிட்டோர் அறிவுறுத்தி, ஏப்ரல் 14 வரை, ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர். இக்காலகட்டத்தில், பொதுமக்கள் சிரமப்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு, அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
போதுமான இடைவெளியில் நின்று, பொருட்கள் பெற்றுச் செல்ல, அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் மட்டுமே, இந்த சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறது. மக்கள் தங்களுக்கு பொருள் கிடைத்தால் போதும் என்று முண்டியடிக்கின்றனர்.
இதனால், கடை உரிமையாளர்களே, கடைகளை திறக்க பயப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று அதிகாலை முதலே, காய்கறி, இறைச்சி மற்றும் மளிகைக்கடைகளில், கூட்டம் அலைமோதியது.சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், இவர்கள் இதேபோன்று வந்தால், வைரஸ் தாக்குதலின் அடுத்த கட்டத்துக்கு, கோவை நகர் சென்று விடும். பாதிப்பும் அதிகரிக்கும்.அவசர மற்றும் அத்தியாவசிய தேவைக்காக, திறக்கப்பட்டிருக்கும் கடைகளும் இனி திறக்க வழியின்றி போகும். ஒரு சிலர் விழிப்புணர்வு இன்றி, செயல்படுவதால், அனைவரும் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்படும்.
மீன் மார்க்கெட்டில் அப்பப்பா!
தடை உத்தரவு முடியும் வரை, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே மீன் மார்க்கெட் செயல்படும் என்ற அறிவிப்பால், லாரி பேட்டை மீன் மார்க்கெட்டில் மக்கள் திரண்டனர். நெருக்கடியடித்து கூட்டமாக போட்டி போட்டு வாங்கியதை பார்த்து, கடை உரிமையாளர்களே அதிர்ச்சி அடைந்தனர்.
யாரிடம் வேண்டுமானாலும் கொரோனா வைரஸ் இருக்கலாம். ஆகவே, கோவையில் இறைச்சிக்கடைகள், மீன் மார்க்கெட்டுகளை உடனடியாக மூட, கலெக்டர் முன்வர வேண்டும். தவறினால், கோவை மக்களை யாராலும் காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டு விடும்.

'மீன் மார்க்கெட் மூட ஆலோசிக்கிறோம்'
உக்கடம் மீன் மார்க்கெட் வியாபாரிகள் சங்க செயலாளர் ஜாபர் கூறுகையில், ''மக்கள் இவ்வாறு வருவதை பார்க்கும் போது, வருத்தமாக உள்ளது. எங்களால், இவர்கள் பாதிப்புக்குள்ளாவார்களோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. சங்க உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து, தடை உத்தரவு காலம் வரை மீன் விற்பனையை நிறுத்தி விட ஆலோசிக்கப்படும்,'' என்றார்.

மூலக்கதை