முன்னெச்சரிக்கை தீவிரம்! 'கொலைக்கார' கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க..

தினமலர்  தினமலர்
முன்னெச்சரிக்கை தீவிரம்! கொலைக்கார கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க..

சென்னை : தமிழகம் முழுதும், 'கொலைக்கார' கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, பல்வேறு துரித நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில், சென்னையில் நடைபெற்ற சுகாதார பணிகள்:

மாதவரம் மண்டலசுகாதார பணியாளர்களுக்கு உதவியாக, 2,500 சோப்பு, 400 முக கவசம் ஆகியவற்றை, மாதவரம் எம்.எல்.ஏ., சுதர்சனம், நேற்று வழங்கினார். அதேபோல், குடும்பத்தினருடன் தங்கி வேலை செய்து வந்த, 50க்கும் மேற்பட்ட, மேற்கு வங்க தொழிலாளர்கள், சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்தனர். அவர்களுக்கு, அந்த பகுதி, தி.மு.க., பிரமுகர் நாராயணன், சிறுதொழில் முனைவோர் சங்க நிர்வாகி மோகன் ஆகியோர், 15 நாட்களுக்கு தேவையான, மளிகை பொருட்களை வழங்கி உதவினர்.

மாதவரம் மண்டலத்தில், வெளிநாடுகளில் இருந்து, வீடு மற்றும் உறவினர் வீடுகளுக்கு வந்த, 130 பேர் மாநகராட்சி மருத்துவ குழுவினர் மூலம் கண்டறிப்பட்டனர். அவர்கள், அந்தந்த வீடுகளில், தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். அந்த வீடுகளில், 'ஸ்டிக்கர்' ஒட்டப்பட்டுள்ளன.

வாலாஜா சாலை வழியாக, நேற்று முன்தினம் இரவு, தேவையின்றி டூ - வீலர்களில் சுற்றித்திரிந்தவர்களை, திருவல்லிக்கேணி குற்றப்பிரிவு ஆய்வாளர் மறித்து, வாகனங்கள் மீதும் ஓட்டுனர்கள் மீதும் பெயின்ட் அடித்தார். இது குறித்து அவர் கூறும்போது, தொடர்ந்து விதிமீறலில் ஈடுபடுவோரை அடையாளம் காண, பெயின்ட் அடித்து வருகிறோம். அதிரடி நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே, நிரந்தர தீர்வு கிடைக்கும் என்றார்.

 படப்பை, பணப்பாக்கம் கிராமத்தில், போதிய வருமானம் இன்றி தவித்த, 100 குடும்பங்களுக்கு, தலா, 25 கிலோ அரிசி மூட்டை, இரண்டு உப்பு பாக்கெட் மற்றும் ஒரு சோப்பை, அ.ம.மு.க., நிர்வாகி எச்.ரவி என்பவர், குடும்பத்தினருடன் சென்று வழங்கினார்.  சிந்தாதிரிப்பேட்டை, அருணாச்சலம் சாலையில், பிரதான சாலைகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில், தீயணைப்பு படையினர், தீவிரமாக ஈடுபட்டனர்.

கீழ்ப்பாக்கம் குடிநீர் நீரேற்று நிலையத்தில், பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும், பரிசோதனைக்கு பின்னரே, பணிக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள் யாரும் பணிக்கு வர வேண்டாம் என, வாரிய அதிகாரிகள், ஊழியர்களுக்கு அறிவுறித்தி உள்ளனர்.

மூலக்கதை