காய்ச்சல், மூச்சுத்திணறல் உள்ளதா: சுகாதாரத்துறை ஆய்வு

தினமலர்  தினமலர்
காய்ச்சல், மூச்சுத்திணறல் உள்ளதா: சுகாதாரத்துறை ஆய்வு

சென்னை : சென்னையில், 'கொரோனா' வைரஸ் உறுதி செய்யப்பட்ட நபர்களின் வசிப்பிடத்தை சுற்றியுள்ள, 2,500 வீடுகளுக்கு சென்று, யாருக்காவது காய்ச்சல், மூச்சுத்திணறல் உள்ளதா என, சுகாதாரத்துறை ஆய்வு செய்து வருகிறது.

கொரோனா வைரஸ், சமூக தொற்றாக பரவாமல் தடுக்க, சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள், வீட்டின் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பில் உள்ளனர். அவர்களுக்கு, காய்ச்சல், சளி போன்ற அறிகுறி தெரிந்தால், உடனே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். பரிசோதனையில், கொரோனா உறுதியானால், பாதிக்கப்பட்டவர் வீட்டை சுற்றி வசிப்போருக்கு, இந்த தொற்று பரவியதா என கண்டறிய, வீடு, வீடாக ஆய்வு நடத்த, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இதன்படி, கொரோனா பாதித்த நபரின் வீட்டை சுற்றி வசிக்கும், 2,500 வீடுகளில் ஆய்வு நடத்தும் பணி, நேற்று துவங்கியது. ஒவ்வொரு வீடாக செல்லும் ஊழியர்கள், காய்ச்சல், சளி, அடிக்கடி தும்மல், தொண்டை வலி, மூச்சு விடுவதில் சிரமம் போன்ற பிரச்னைகள் உள்ளதா என, ஒவ்வொருவரிடமும் கேட்டு பதிவு செய்கின்றனர்.

இந்த பாதிப்புகள் இருந்தால், அவர்களை, அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல வலியுறுத்துகின்றனர். அதோடு, தினசரி உடல்நிலை குறித்து கேட்டறிய, அவர்களது பெயர், முகவரி, மொபைல் எண் ஆகியவற்றை பதிவு செய்கின்றனர்.இந்த பணியை, ஊரடங்கு முடியும் வரை, சுழற்சி முறையில் செய்ய உள்ளனர். இதன் வாயிலாக, வைரஸ் சமூக தொற்றாக மாறுவதை, எளிதில் தடுக்க முடியும் என, மாநகராட்சி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

மூலக்கதை