வெளியே சுற்ற பொய் காரணம் தேடாதீர்! போலீசார் எச்சரிக்கை

தினமலர்  தினமலர்
வெளியே சுற்ற பொய் காரணம் தேடாதீர்! போலீசார் எச்சரிக்கை

சோழிங்கநல்லுார் : 'பொய் காரணங்கள் கூறி, வெளியில் சுற்றுவதை, பொதுமக்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்' என, போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

'கொரோனா' தடுப்பு நடவடிக்கையில், தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க, பொதுமக்கள், வீட்டில் இருந்து ஒத்துழைக்க வேண்டும் என, அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.ஆனால், அத்தியாவசிய தேவைகளை தவிர, வேறு எதற்கும் வெளியில் வர வேண்டாம் என எச்சரித்தும், சிலர் கடைப்பிடிக்கவில்லை. மேலும், வெளியில் சுற்ற பொய் காரணம் சொல்லி ஏமாற்றுவதாக, போலீசார் ஆதங்கப்படுகின்றனர்.

இது குறித்து, போலீசார் கூறியதாவது:வைரஸ் தடுப்பு நடவடிக்கையில், இதர துறையினருடன் சேர்ந்து, 24 மணி நேரம் பணி செய்கிறோம். சிலர், பொய் காரணங்களை கூறி, வெளியில் சுற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.குறிப்பாக, சென்னையின் பல்வேறு பகுதியில் இருந்து, இ.சி.ஆர்., - ஓ.எம்.ஆர்., வழியாக பயணம் செய்கின்றனர்.

வீட்டின் அருகில், கடை, ஏ.டி.எம்., இருந்தும், 5 முதல், 6 கி.மீ., தொலைவில் உள்ள இடங்களுக்கு செல்கின்றனர். சிலர், கையில் காய்கறி பை, காலி டிபன் பாக்ஸ், மருந்து சீட்டுடன் ஊர் சுற்றுகின்றனர். கேட்டால், உறவினருக்கு சாப்பாடு கொண்டு செல்வதாக கூறுகின்றனர். இதை, பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் கூறி, அவர்களையும் ஊர் சுற்ற அனுப்புகின்றனர். ஊரடங்கு எப்படி இருக்கிறது என்று பார்க்க, ஆர்வக் கோளாறில் சுற்றுகின்றனர்.

சாலையில் செல்பவர்களில், 40 சதவீதம் பேர், பொய் காரணம் கூறி செல்கின்றனர். பொய் காரணங்களை, பின்னால் சென்று விசாரிக்க முடியவில்லை. இவர்களால், பெரிய அளவில் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. 'வழக்கு பதிவு செய்தால், நிறுவனங்களில் வேலைக்கு செல்வதில் சிக்கல் ஏற்படும்; சுற்றாதீர்கள்' என கூறியும், சிலர் எங்கள் பேச்சை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. இனிமேல், அத்தியாவசிய காரணம் இல்லாமல் சுற்றினால், வழக்கு பதிவு செய்யப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

மூலக்கதை