கொரோனாவால் பொருளாதார வீழ்ச்சி: ரயில் முன் பாய்ந்து அமைச்சர் தற்கொலை

தினகரன்  தினகரன்
கொரோனாவால் பொருளாதார வீழ்ச்சி: ரயில் முன் பாய்ந்து அமைச்சர் தற்கொலை

பிராங்பர்ட்: கொரோனா தாக்குதலால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்த கவலையால், ஜெர்மனியின் ஹெஸ்ஸி மாகாண நிதியமைச்சர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். ஜெர்மனியில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 455 பேர் பலியாகி விட்டனர். இங்கு 58 ஆயிரத்து 254 பேருக்கு இந்த வைரஸ் பாதித்துள்ளது. இதனால், ஜெர்மனியின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஜெர்மனியின் நிதித்துறை தலைநகராக பிராங்பர்ட் இருக்கிறது. இது, ஹெஸ்ஸி மாகாணத்தில் உள்ளது. இங்குதான் டெட்சே வங்கி மற்றும் காமர்ஸ் பேங்க் தலைமையகங்கள் உள்ளன. இந்த மாகாணத்தின் நிதியமைச்சர் தாமஸ் ஷாபர் (54). கடந்த 10 ஆண்டுகளாக இப்பதவியில் இருந்த இவருக்கு, கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மிகப்பெரிய கவலையை அளித்தது. இந்த பாதிப்பை எதிர்கொள்வது குறித்து கம்பெனிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் உதவ, இரவுப்பகலாக தாமஸ் பணியாற்றினார். இந்நிலையில், இவரது உடல் ரயில்வே தண்டவாளம் அருகே நேற்று முன்தினம் மீட்கப்பட்டது. இவர்  ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர். இது, ஜெர்மனியில்  மிகப் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்ற ஆழ்ந்த கவலையில் தாமஸ் இருந்தார். அவரது மறைவு அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற சிக்கலான நேரத்தில், தாமசை போன்ற ஒருவர் நமக்கு நிச்சயம் இருந்திருக்க வேண்டும்,’ என ஹெஸ்ஸி மாகாண முதல்வர் வோல்கர் கூறியுள்ளார். மறைந்த தாமஸ், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலின் சிடியு கட்சியை சேர்ந்தவர். இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

மூலக்கதை