கர்நாடக எல்லைகள் மூடல் ஆம்புலன்சை திருப்பி அனுப்பியதால் இரண்டு நோயாளிகள் சாவு:கேரள முதல்வர் கண்டனம்

தினகரன்  தினகரன்
கர்நாடக எல்லைகள் மூடல் ஆம்புலன்சை திருப்பி அனுப்பியதால் இரண்டு நோயாளிகள் சாவு:கேரள முதல்வர் கண்டனம்

திருவனந்தபுரம்: கேரள  மாநிலம் காசர்கோடு கர்நாடக மாநிலத்தை ஒட்டியுள்ள பகுதியாகும். பெரும்பாலும்  கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள்  பல்வேறு சிகிச்சைகள் மற்றும் தேவைகளுக்கு கர்நாடக மாநிலம் மங்களூரு சென்று  வருகின்றனர்.  இந்த  நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு காசர்கோட்டில் இருந்து கர்நாடகா  செல்லும் அனைத்து சாலைகளையும் அம்மாநில அரசு அதிகாரிகள் மண் போட்டு மூடினர்.  சோதனை சாவடிகளிலும் கேரளாவில் இருந்து செல்லும் வாகனங்களுக்கு அனுமதி  மறுக்கப்பட்டது. இதனால் நோயாளிகள் கர்நாடகா மாநிலத்திற்கு சிகிச்சைக்கு செல்ல முடியாத  நிலை ஏற்பட்டது.இந்த நிலையில் 27ம் தேதி மூச்சுத்திணறல்  காரணமாக அப்துல் ரகுமான் என்ற நோயாளியை ஆம்புலன்சில் மங்களூருக்கு கொண்டு  செல்ல முயன்றனர். ஆனால் அவரை சோதனை சாவடியில் போலீசார் தடுத்து நிறுத்தி  மேற்கொண்டு செல்ல மறுத்து விட்டனர். இதையடுத்து அவர் திரும்ப வீட்டுக்கு  கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வீட்டில் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த  நிலையில் நேற்று காலை காசர்கோட்டை சேர்ந்த பாத்திமா(70)  என்ற  மூதாட்டி  உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆம்புலன்சில் மங்களூருவுக்கு கொண்டு  செல்லப்பட்டார். ஆனால் கர்நாடக எல்லை  தலப்பாடி சோதனை சாவடியில் போலீசார் அந்த ஆம்புலன்சை உள்ளே விட மறுத்தனர். இதையடுத்து  பாத்திமாவை திரும்ப வீட்டுக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர்  பரிதாபமாக இறந்தார்.

மூலக்கதை