ஊரடங்கை மதிக்காதவர்கள் 14 நாட்கள் தனிமை; மாநில, மாவட்ட எல்லைகளை முழுமையாக மூடுங்க: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு

தினகரன்  தினகரன்
ஊரடங்கை மதிக்காதவர்கள் 14 நாட்கள் தனிமை; மாநில, மாவட்ட எல்லைகளை முழுமையாக மூடுங்க: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு

டெல்லி: உலகளவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 31,000ஐ தாண்டியது. 5 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கி பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இதுவரை, இந்தியா முழுவதும் 26 பேர் உயிரிழந்துள்ளனர். 979 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தை பொருத்தவரை 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் கடந்த 24ம் தேதி மாலை 6 மணி முதல் வருகிற ஏப்ரல் மாதம் 1ம் தேதி அதிகாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு (ஊரடங்கு) பிறப்பிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.தொடர்ந்து, கடந்த 24ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் ஏப்ரல் 15-ம் தேதி வரை 21 நாட்கள் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி, தமிழகத்திலும் ரயில், பஸ் போக்குவரத்து, அரசு, தனியார் அலுவலகங்கள் வருகிற ஏப்ரல் மாதம் 14ம் தேதி வரை மூடப்பட்டு இருக்கும். தொடர்ந்து, 31.3.2020 வரை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவும், இதர உத்தரவுகளும் 14.4.2020 வரை நீட்டிக்கப்படுகிறது என்று தமிழக அரசு அறிவித்தது. சிறிய மளிகை கடை, காய்கறி கடை, மருந்து கடை, பால் விற்பனை, பத்திரிகைகள் உள்ளிட்ட சில அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் அரசு அனுமதித்துள்ளது. இதற்கிடையே, ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும், மக்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து பொதிய விழிப்புணர்வு இல்லாமல் அங்கு இங்குமாக சென்று வருகின்றனர். இவர்களை கட்டுப்படுத்தவும் காவல்துறையினர் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர். இருப்பினும், இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்த மாதிரி தெரியவில்லை. இந்தியா அடுத்து கொரோனா வைரஸ் முதல் மற்றும் இரண்டாம் நிலையை கடந்து, சமூக தொற்று எனப்படும் அபாயகரமான 3ம் கட்டத்தை அடுத்த 5 முதல் 10 நாட்களில் இந்தியா சந்திக்கும் என்று நிதி ஆயோக்கின் சிறப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் எச்சரித்துள்ளார். இந்நிலையில், ஊரடங்கு உத்தரவை கடுமையாக பின்பற்ற மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், நெடுஞ்சாலைகளில் மக்கள் நடந்து செல்ல தடை விதிக்க வேண்டும். மாநில மற்றும் மாவட்ட எல்லைகளை முழுமையாக மூட வேண்டும். இடம் பெயர்ந்து பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உரிய ஊதியத்தை நிறுவனங்கள் வழங்க வேண்டும். இடம் பெயர்ந்து பணியாற்றிவரும் தொழிலாளர்களை வெளியேறக் கூறுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும். இடம்பெயர்ந்து படித்து வரும் மாணவர்களையும் வெளியேறுமாறு கட்டாயப்படுத்தினால் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊரடங்கை மதிக்காதவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தவும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மூலக்கதை