புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டு நலனுக்காக சொந்த ஊர் செல்ல முயற்சிக்க வேண்டாம்: முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்

தினகரன்  தினகரன்
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டு நலனுக்காக சொந்த ஊர் செல்ல முயற்சிக்க வேண்டாம்: முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி: புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டு நலனுக்காக சொந்த ஊர் செல்ல முயற்சிக்க வேண்டாம் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டும் கோள் விடுத்துள்ளார். நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால், டெல்லியில் வேலை செய்து வந்த வெளி மாநில தொழிலாளர்கள், நடந்தே தங்கள் மாநிலங்களுக்கு செல்கின்றனர். இவ்வாறு திரும்பும் தொழிலாளர்களுக்காக உத்தர பிரதேச அரசு ஆயிரம் சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளது. இதனால், நேற்று நள்ளிரவு முதல் டெல்லி ஆனந்த் விஹார் பேருந்து நிலையத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் திரண்டனர். கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சமூக விலகலே பிரதான தீர்வு என்ற சூழலில், தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக திரண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த நிலையில் தான், டுவிட்டரில் கெஜ்ரிவால் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். உங்களுக்கு ( புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்) தேவையான உணவு உறைவிட வசதி செய்து கொடுக்கப்படும் என்று நான் உறுதி அளிக்கிறேன் என கெஜ்ரிவால் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். தற்போதைக்கு நாட்டு நலனுக்காக உங்கள் கிராமங்களுக்கு நீங்கள் செல்ல வேண்டாம் என கூறினார். தற்போது எங்கு இருக்கிறீர்களோ அங்கேயே இருங்கள் எனவும், ஏனெனில் அதிக அளவு கூடுவது உங்களுக்கும் கொரோனா தொற்றை ஏற்படுத்தும் என கூறினார். கொரோனா வைரஸ் உங்கள் மூலமாக உங்கள்  கிராமங்களுக்கும் குடும்பங்களுக்கும் சென்றடையும் என கூறினார். பிறகு நாடு முழுவதும் பரவும் எனவும் தெரிவித்தார். இவ்வாறு நடந்தால், இந்த பெருந்தொற்றில் இருந்து நாட்டை காப்பது கடினம் என்று தெரிவித்துள்ளார்.

மூலக்கதை