கொரோனா பிடியில் இருந்து தப்பினார் கனடா பிரதமரின் மனைவி: 15 நாட்களாக சிகிச்சை பெற்ற நிலையில் குணமடைந்துள்ளதாக அறிவிப்பு

தினகரன்  தினகரன்
கொரோனா பிடியில் இருந்து தப்பினார் கனடா பிரதமரின் மனைவி: 15 நாட்களாக சிகிச்சை பெற்ற நிலையில் குணமடைந்துள்ளதாக அறிவிப்பு

டொரோன்டா: கொரோனாவால் பாதிக்கப்பட்ட கனடா பிரதமர் மனைவி சோபி கிரகோயர் ட்ரூடோ குணமடைந்தார் என ஒட்டாவா பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கனடாவில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 5,100 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 55 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் கொரோனா காய்ச்சல் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோபியா ட்ரூடோவுக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் அச்சுறுத்தலால் அவர் தனிமைப்படுத்தப்பட்டார். தொடர்ந்து அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. 15 நாட்களாக கொரோனாவுக்காக சிகிச்சை எடுத்து வந்த சோபியின் உடல்நிலை நன்றாக உள்ளது என ஜஸ்டின் நேற்று கூறியிருந்த நிலையில் தற்போது அவர் முழுவதுமாக குணமடைந்தார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. அவருக்கு கொரோனா இல்லை என்பதை அவரது மருத்துவரும் ஒட்டாவா சுகாதாரத் துறையும் உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவர் பேஸ்புக் பக்கத்தில் கூறியதாவது; நான் பாதிக்கப்பட்டிருந்த வேளைகளில் நலமடைய வேண்டி வாழ்த்திய அனைவருக்கும் இதயபூர்வமான நன்றிகள். பாதிப்புக்குள்ளாகி துன்பப்படும் அனைவருடனும் எனது அன்பைப் பகிர்ந்துகொள்கிறேன் என தனது பேஸ்புக் பதிவில் திருமதி ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

மூலக்கதை