கொரோனா குறித்து பல்வேறு தகவல்களை சீனா மறைத்திருப்பதே அந்த நோய்க்கு எதிரான போராட்டத்திற்க்கு பெரும் பின்னடைவாக அமைந்துவிட்டது: நேஷனல் ரிவியூ குற்றச்சாட்டு

தினகரன்  தினகரன்
கொரோனா குறித்து பல்வேறு தகவல்களை சீனா மறைத்திருப்பதே அந்த நோய்க்கு எதிரான போராட்டத்திற்க்கு பெரும் பின்னடைவாக அமைந்துவிட்டது: நேஷனல் ரிவியூ குற்றச்சாட்டு

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் குறித்து பல்வேறு தகவல்களை சீனா மறைத்திருப்பதே அந்த நோய்க்கு எதிரான போராட்டத்திற்க்கு பெரும் பின்னடைவாக அமைந்து விட்டதாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் நேஷனல் ரிவ்யூ பத்திரிகை குற்றம் சாட்டியுள்ளது. சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கண்டறியப்பட்டது கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி தான். ஹூவானன் கடல் உணவு சந்தைக்கு சென்று வந்த ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அதன் பிறகு 5 நாட்களிலேயே சந்தைக்கு தொடர்பே இல்லாத அவரது மனைவிக்கும் காய்ச்சல் ஏற்பட்டு தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டார். இதன் பின்னர் டிச. 2-வது வாரத்தில் பலரும் காய்ச்சலுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் எல்லாம் கடல் உணவு சந்தையோடு தொடர்புடையவர்கள் என்று சீன அதிகாரிகள் தெரிவித்து வந்தனர். டிச. 25-ம் தேதி மருத்துவர் லி வென்லியாங் என்பவர் சார்ஸ் போன்ற ஒரு சுவாச கோளாறு ஏற்படுத்தும் தொற்று நோய் பரவ வாய்ப்பு இருப்பதாக தனது சக மருத்துவர்களை எச்சரித்து தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார். ஆனால் அவர் வதந்திகளை பரப்பியதாக குற்றம் சாட்டிய உள்ளூர் அதிகாரிகள் டிச.31-ம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில்; நோய் மனிதர்களிடம் இருந்து மற்ற மனிதர்களுக்கு பரவுவதற்கான எந்த ஆதாரமும் இல்லை என கூறினர். எச்சரிக்கை மணி எழுப்பிய மருத்துவரிடம் ஜனவரி 3-ம் தேதி மன்னிப்பு கடிதம் வாங்கியதுடன் முன்பின் தெரியாத நோய் குறித்து எந்த தகவலையும் வெளியிட வேண்டாம் என தனக்கு கீழ் உள்ள நிறுவனங்களுக்கு சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் உத்தரவிட்டது. அதேநாளில் வுகானில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளை சோதிப்பதை நிறுத்தும் படி ஹூபே சுகாதார ஆணையம் உத்தரவிட்டதுடன் அனைத்து மாதிரிகளையும் அழிக்கவும் ஆணையிட்டது. மனிதரிடம் இருந்து மனிதருக்கு பரவும் ஆதாரம் எதுவும் இல்லை என கூறி வந்த சீனா ஜனவரி 8-ம் தேதி பாதிப்பு ஏற்படுத்தும் வைரசை கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்தது. ஜனவரி 11-ம் தேதி சீன சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கடல் உணவு சந்தையோடு தொடர்புடையவர்கள் என அறிவித்தது. அதே நேரத்தில் வைரஸ் மனிதரிடம் மற்றோரு மனிதருக்கு பரவுவதற்கான ஆதாரம் ஏதும் இல்லை என மீண்டும் கூறியது. ஜனவரி 13-ம் தேதிதான் சீனாவுக்கு வெளியே முதல் கொரோனா பாதிப்பு தாய்லந்தில் கண்டுபிடிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சீன பெண் வுகானில் கடல் உணவு சந்தைக்கு செல்லவில்லை என தாய்லந்து மருத்துவர்கள் தெரிவித்தனர். ஜனவரி 14-ம் தேதி ஜப்பானில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட் பின்னர் தான், சீனா ஜன.15-ம் தேதி கொரோன வைரஸ் மனிதரிடம் இருந்து மனிதருக்கு பரவும் என்பதை அறுதியிட்டு கூற முடியாது என அறிவித்தது. இவ்வாறு மனிதரிடம் இருந்து மனிதருக்கு பரவும் என்று தெரிந்த பின்னரும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சுமார் 40 ஆயிரம் பேரை ஒரே இடத்தில் சீனா கூட அனுமதித்ததாக அமெரிக்காவின் நேஷனல் ரிவ்யூ பத்திரிகை கூறுகிறது. ஜன.20-ம் தேதி வுஹான் மாகாணத்தில் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட பின்னர் தான் மனிதரிடம் இருந்து மனிதருக்கு இந்த நோய் பரவுகிறது என்பதை சீனா முதல் முறையாக முழுமையாக அறிவித்தது. ஜன. 21-ம் தேதி அமெரிக்காவில் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. பாதிக்கப்பட்ட நபர் சீனாவில் இருந்து 6 நாட்களுக்கு முன்னர் தான் அமெரிக்காவிற்கு திரும்பியிருந்தார். இதுவரை சீனா கூறுவதை கேட்டுக்கொண்டிருந்த உலக சுகாதார குழு ஒன்று ஜனவரி 22-ம் தேதி வுகான் சென்று நோய் மனிதரிடம் இருந்து மனிதருக்கு பரவுகிறது என்பதை உறுதி செய்தது. இதன் பிறகு வுகான் நகரை தனிமைப்படுத்துவதற்கான முயற்சிகளை சீன அரசு மேற்கொண்டது. ஆனால் அதற்குள் வுகான் நகரில் பாதிக்கப்பட்டு எந்த அறிகுறியும் தெரியாமல் இருந்த ஆயிரக்கணக்கானோர் உலகம் முழுவதும் பல பகுதிகளுக்கும் பயணம் மேற்கொண்டு விட்டனர். இந்நிலையில் இத்தகைய கொடிய நோய் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு பரவி விட்டது. 

மூலக்கதை