கொரோனா தடுப்பு ரயில்வே மருத்துவமனைகளில் மத்திய அரசு ஊழியர்களும் சிகிச்சை பெறலாம்....ரயில்வே வாரியம் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
கொரோனா தடுப்பு ரயில்வே மருத்துவமனைகளில் மத்திய அரசு ஊழியர்களும் சிகிச்சை பெறலாம்....ரயில்வே வாரியம் அறிவிப்பு

டெல்லி: மத்திய அரசு ஊழியர்கள் ஆங்காங்கு உள்ள ரயில்வே மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அடையாள அட்டையை காண்பித்து ரயில்வே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கி பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இதுவரை, இந்தியா முழுவதும் 26 பேர் உயிரிழந்துள்ளனர். 979 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தை பொருத்தவரை 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக இந்திய ரயில்வே தனது ரயில்களின் பெட்டிகளை மருத்துவமனையாக மாற்றுவதாக அறிவித்தது. ஏற்கனவே கொரோனா தொற்றுநோயை அடுத்து ரயில்வே ஏற்கனவே பயணிகள், அஞ்சல் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளை ஏப்ரல் 14 வரை நிறுத்தி வைத்துள்ளது. முதலில் இந்த மருத்துவமனைகளில் ரயில்வே ஊழியர்களுக்கு மட்டுமே அனுமதி இருந்தது. இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கும் அனுமதி அளித்துள்ளதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கூறியதாவது; கொரோனா வைரஸ் பரவுவதைக் கருத்தில் கொண்டு இந்திய ரயில்வே தனது அனைத்து மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களின் சேவைகளை அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் விரிவுபடுத்தியுள்ளது என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. இந்த சேவைகளில் நாடு முழுவதும் உள்ள 128 மருத்துவமனைகள் மற்றும் இந்திய ரயில்வேயின் 586 மருந்தகங்கள் செயல்படுத்த பட உள்ளன. கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் உள்ள ரயில் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார பிரிவுகளின் சேவைகள் அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும், அடையாள அட்டைகளைக் காண்பிப்பதில், ரயில்வே மருத்துவமனைகள் மற்றும் சுகாதார அலகுகளில் பயன்படுத்தக் கிடைக்கும் என்று ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. தற்போதைய மற்றும் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்களால் மட்டுமே இந்த வசதிகளைப் பெற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ரயில்வே ஊழியர்களுக்கு மட்டுமே ரயில்வே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற உரிமை இருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை