கொரோனா வைரசின் உற்பத்தி மையமாக மாறிய அமெரிக்கா: வைரஸ் தாக்கத்தால் பலி எண்ணிக்கை 2,211 ஆக உயர்வு: 1,23,426 பேருக்கு பாதிப்பு

தினகரன்  தினகரன்
கொரோனா வைரசின் உற்பத்தி மையமாக மாறிய அமெரிக்கா: வைரஸ் தாக்கத்தால் பலி எண்ணிக்கை 2,211 ஆக உயர்வு: 1,23,426 பேருக்கு பாதிப்பு

வாஷிங்டன்: உலக அளவில் கொரோனா வைரஸால் அமெரிக்கா அதிக பாதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரசின், புதிய உற்பத்தி மையமாக அமெரிக்கா மாறியிருக்கிறது. அங்கு நாளுக்கு நாள் வைரஸ்  பரவல் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு தீவிரமடைந்துள்ள நிலையில், வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கையில் சீனா, இத்தாலியை மிஞ்சி அமெரிக்கா முதலிடத்துக்கு சென்றது. இந்நிலையில், நேற்று முன்தினம் ஒரே நாளில் அங்கு புதிதாக  18,000க்கும் மேற்பட்டோருக்கு நோய் தொற்று பரவ, மொத்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டி இருக்கிறது. மேலும், ஒரே நாளில் 401 பேர் பலியாகி உள்ளனர். தற்போதைய நிலவரப்படி, அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 23,426 ஆக உள்ளது. மொத்த பலி 2,211 ஆக உள்ளது. நியூயார்க்கில் மட்டும் 50,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, 450-க்கும் மேற்பட்டோர் பலியாகி  உள்ளனர். நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அதிபர் டிரம்ப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்துள்ளார். போர்காலங்களில் பயன்படுத்தும் சட்டமான பாதுகாப்பு உற்பத்தி சட்டத்தை பயன்படுத்தி, கொரோனா  சிகிச்சைக்கு அவசிய தேவையான வென்டிலேட்டர்களை விரைந்து தயாரிக்க நாட்டின் மிகப்பெரிய மோட்டார் நிறுவனமான ஜெனரல் மோட்டார்சுக்கு அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இத்தாலி நிலவரம்:முன்னதாக இத்தாலியில் கோரத்தாண்டவம் ஆடி கொரோனா வைரஸ் சற்று ஓய்வெடுத்தது. இந்நிலையில், இத்தாலில் மீண்டும் தனது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது. நேற்று முன்தினம் மிக அதிபட்சமாக 919 பேர் பலியாகி உள்ளனர்.ஒரே நாளில் இவ்வளவு பேர் பலியாவது இதுவே முதல் முறையாகும். தற்போது, மொத்த பலி எண்ணிக்கை 10,023 ஆக உள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 92,472 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து இத்தாலி, சீனா, ஸ்பெயின்,  ஜெர்மனி, பிரான்ஸ், ஈரான், பிரிட்டனிலும் அதிக பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மூலக்கதை