பூக்...பூக்...பூக்! உணவுக்கு தவிக்கும் வடமாநிலத்தவர்:பசி தீர்க்கணும் மாவட்ட நிர்வாகம்

தினமலர்  தினமலர்
பூக்...பூக்...பூக்! உணவுக்கு தவிக்கும் வடமாநிலத்தவர்:பசி தீர்க்கணும் மாவட்ட நிர்வாகம்

போத்தனூர்:கோவையின் பல்வேறு பகுதிகளில் பணிபுரிந்து வந்த, பல வட மாநிலத்தவர், ஊரடங்கு சட்டம் காரணமாக உணவு கிடைக்காமல் பசியுடன் தவிக்கின்றனர். சுந்தராபுரத்தில் நேற்று பசி பொறுக்க முடியாமல் வீதியில் திரண்ட பலரை, போலீசார் விரட்டினர்.
நகரின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படும் இப்பிரச்னைக்கு, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தீர்வு காண வேண்டும்.மாவட்டம் முழுவதும் கட்டுமானம், தொழிற்சாலை, ஓட்டல் என அனைத்து துறைகளிலும், வட மாநிலத்தவர் வேலை பார்க்கின்றனர். ஓட்டல்களில் பிறருக்கு உணவு அளித்த இவர்களில் பலர், இன்று பசியுடன் தெருவில் நிற்கின்றனர்.குறிப்பாக, தொழிற்சாலைகள் அதிகம் உள்ள சுந்தராபுரம், மலுமிச்சம்பட்டி தொழிற்பேட்டைகளில் உள்ள தொழிற்சாலைகளில், பல ஆயிரக்கணக்கானோர் உள்ளனர்.
ஒரு சில நிறுவனத்தார், அவர்களுக்கான தங்குமிட வசதியை செய்து தந்துள்ளனர்.பெரும்பாலானோர் தாங்கள் வேலை பார்க்கும் பகுதியில், வாடகைக்கு வீடு எடுத்து, குடும்பமாக தங்கியுள்ளனர்; பலர் சேர்ந்தும் தங்கியுள்ளனர்.இரண்டு நாட்களாக பட்டினி!அது போல, குறிச்சி சிட்கோவிலுள்ள தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான தொழிலில் ஈடுபடும் பீகார் மற்றும் உ.பி.,யை சேர்ந்த, 400 பேர் சீனிவாசா நகரில் தங்கியுள்ளனர்.
சாதாரண நாட்களில் இவர்கள், சுற்றுப்பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் சாப்பிட்டு வந்தனர்.தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், இவர்களுக்கு வேலையின்றி, உணவு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இரு நாட்களாக அங்குமிங்கும் அலைந்தபடி இருந்தனர்.
நேற்று அவர்களால் பசியை தாங்க முடியவில்லை. முற்பகல், 11:30 மணியளவில், 200க்கும் மேற்பட்டோர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 1 மெயின்ரோட்டில் திரண்டனர்.விரட்டியது போலீஸ்!தகவலறிந்து அங்கு வந்த போலீஸ் உதவி கமிஷனர் செட்ரிக் மனுவேல் அவர்களிடம் பேசினார். பசி வேகத்தில் அவர்கள் ஹிந்தியில், 'ஹமே பூக்(பசி) நஹின் சே பா ரஹாஹூ...'(எங்களால் பசி தாங்க முடியவில்லை) என்று வயிற்றைக் காட்டி பேசினர். சிலர், அரைகுறை தமிழில், தாங்கள் பசியோடு இருப்பதாக தெரிவித்தனர்.இதை கேட்ட உதவி கமிஷனர், தன்னார்வலர்கள் உதவியோடு உணவுக்கு ஏற்பாடு செய்வதாக கூறினார். அத்துடன், 144 தடையுத்தரவு உள்ளதால், இதுபோல கூட்டம் சேரக்கூடாது எனவும் அறிவுறுத்தினார்.
கூடியிருந்தோர் கோஷமிட்டு, எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, 'லத்தி சார்ஜ் செய்யப்படும்; கலைந்து செல்லுங்கள்' என எச்சரித்தார். அப்படியும் கலையாததால் போலீசார் லத்தியை எடுத்தனர். இதனைக் கண்டு அனைவரும் சிதறி ஓடினர். போலீசார் அவர்களை பின் தொடர்ந்து சென்று விரட்டினர். ஆனாலும், ஆங்காங்கே குழுமி நின்றனர்.
சாப்பிட்டதும் அப்பாடா!சிறிது நேரத்தில் வந்து சேர்ந்த உணவு பொட்டலங்கள், அவர்களிடம் வழங்கப்பட்டன. அங்கு வந்த வருவாய்துறையினர், விபரங்களை சேகரித்து சென்றனர். ஆர்.டி.ஓ.,விடம் பேசியும் எவ்வித உதவியும் செய்யவில்லை. மக்கள் கூடுவதை தவிர்க்க பெரும் பாடுபடும் போலீசார், மனித நேயத்துடன் உணவுக்கும் ஏற்பாடு செய்தது பாராட்டுக்குரியது.
அப்படியாக, அவர்களின் நேற்றைய ஒரு வேளை உணவு பிரச்னை அரைகுறையாக தீர்ந்தது. தொடர்ந்து வரும் நாட்களிலும், இவர்களுக்கு உணவு கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், மீண்டும் திரள்வர். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும். ஏனென்றால்...பசி கொடியது!

மூலக்கதை