வீடு... வீடாக! கிராமங்களில் கொரோனா விழிப்புணர்வு: துண்டு பிரசுரம் வினியோகித்து விளக்கம்

தினமலர்  தினமலர்
வீடு... வீடாக! கிராமங்களில் கொரோனா விழிப்புணர்வு: துண்டு பிரசுரம் வினியோகித்து விளக்கம்

திருப்பூர்:திருப்பூர் மாவட்டம் முழுவதும், கிராமப்புற மக்களிடையே கொரோனா வைரஸ் தற்காப்பு வழிமுறைகள் குறித்து, வீடு வீடாக துண்டு பிரசுரம் வழங்கும் பணி துவங்கியுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், நேற்று காலை நிலவரப்படி, ஒருவர் மட்டும் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவர், கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது குடும்பத்தாருக்கு, வைரஸ் தொற்று இல்லை.வெளிநாடு சென்று திரும்பியவர்கள், காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட வெளிமாநில இளைஞர்கள் என, 1,360 பேர், தனிமையில் வைத்து கண்காணிக்கப்படுகின்றனர்.அவர்களில், சளி, காய்ச்சல், தும்மல் இருந்தவர்களுக்கு மட்டும், ரத்தமாதிரி எடுத்து பரிசோதனை செய்யப்பட்டதில், வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவில், மக்கள் அவரவர் வீடுகளில் இருப்பதால், தேவையின்றி வெளியே வர வேண்டாமென, எச்சரிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நகரம் மற்றும் கிராமப்புறங்களில், ஆட்டோ மூலமாக, விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படுகிறது.சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் மேற்பார்வையில், தன்னார்வலர்கள், துாய்மை பணியாளர்களை கொண்டு, துண்டு பிரசுரம் வழங்கப்படுகிறது.
வீடு வீடாக கிருமிநாசினி தெளிவித்து, துண்டு பிரசுரம் வழங்கப்படுகிறது.துண்டு பிரசுரத்தில் குறிப்பிட்டுள்ளபடி, சோப்பினால் கைகளை நன்கு கழுவ வேண்டும். அசுத்தமான கைகளால் முகத்தை தொடாமல் இருக்க வேண்டும்.இருமல், தும்மல் வரும் போது, முழங்கை அல்லது கைக்குட்டை கொண்டு முகத்தை மூட வேண்டும். ஒரு மீட்டர் இடைவெளியில் நின்று பேச வேண்டும். காய்ச்சல், இருமல், மூச்சுதிணறல் இருந்தால், உடனே மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். தேவையற்ற பயணத்தை தவிர்த்து, நிகழ்ச்சி மற்றும் கூட்டங்களில் பங்கேற்பதையும் தவிர்க்க வேண்டும் எனவும் மக்களுக்கு அறிவுறுத்தடுகிறது.
கைகளை சோப்பு மூலமாக எவ்வாறு சுத்தமாக கழுவ வேண்டும் என்பது குறித்து, ஒன்பது நிலைகளில், படத்துடன் விளக்கப்பட்டுள்ளது.அவசர உதவிக்கான தொலைபேசி மற்றும் மொபைல் போன் எண்கள், கட்டணமில்லாத, 104 எண் ஆகிய விவரமும் இடம்பெற்றுள்ளன.
ஊரகவளர்ச்சித்துறை அலுவலர்கள் கூறுகையில்,'மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், களப்பணியாளர்கள், துண்டு பிரசுரத்தில் உள்ள தகவல்களை, மக்களுக்கு விளக்கி கூறி, வீடு வீடாக துண்டு பிரசுரம் வினியோகித்து வருகின்றனர்,' என்றனர்.

மூலக்கதை