குஜராத் எல்லை மூடப்பட்டதால் நடுவழியில் சிக்கிய 3,000 தொழிலாளர்கள்: அதிகாரிகள் பேச்சு நடத்தி மும்பைக்கு திருப்பி அனுப்பி வைத்தனர்

தினகரன்  தினகரன்
குஜராத் எல்லை மூடப்பட்டதால் நடுவழியில் சிக்கிய 3,000 தொழிலாளர்கள்: அதிகாரிகள் பேச்சு நடத்தி மும்பைக்கு திருப்பி அனுப்பி வைத்தனர்

மும்பை: மும்பை பெருநகர பிராந்தியத்தில் கூலித் தொழிலாளர்களாக வேலை செய்து வரும் குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநில மக்கள், சொந்த ஊர்களுக்கு நடந்து சென்றபோது மகாராஷ்டிரா-குஜராத் எல்லை மூடப்பட்டிருந்ததால் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நடுவழியில் சிக்கி பெரிதும் அவதிக்குள்ளானார்கள். மாவட்ட அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை மீண்டும் மும்பையில் அவர்கள் தங்கியிருந்த இடங்களுக்கே அனுப்பி வைத்தனர். மும்பையின் பல்வேறு பகுதிகளிலும், மும்பை பெருநகர பிராந்தியத்தில் உள்ள பொய்சர், விரார், வசாய், வாஷி உள்ளிட்ட பகுதிகளிலும் குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தங்களது குடும்பங்களுடன் தங்கியிருந்து கூலி வேலை செய்து வருகிறார்கள். ஊரடங்கு காரணமாக மும்பையில் வேலையில்லாமல் சாப்பாடுக்கே சிரமப்படும் சூழல் உருவானதால் இந்த மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கே திரும்பிச் செல்ல முடிவெடுத்தனர்.  பொதுப் போக்குவரத்து வாகனங்கள் எதுவும் இயக்கப்படாததால், இந்த தொழிலாளர்கள் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நேற்று முன்தினம் தாங்கள் தங்கியிருந்த இடங்களை காலி செய்து விட்டு சொந்த ஊர்களுக்கு நடந்து செல்ல தொடங்கினர். ஆனால், மும்பையை அடுத்த பால்கர் மாவட்டத்தில் மகாராஷ்டிரா-குஜராத் இடையேயான அச்சாத் என்ற கிராமத்தில் உள்ள எல்லைக்கு சீல் வைக்கப்பட்டிருந்ததால் இந்த அப்பாவி மக்கள் அங்கே சிக்கிக் கொண்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் அவர்கள் தொழிலாளர்களை எல்லை கடந்து செல்ல அனுமதிக்கவில்லை. பெண்களும், குழந்தைகளும் அழுது புலம்பிய போதிலும் போலீசார் அவர்களை எல்லையை கடக்க அனுமதிக்கவில்லை.இதுபற்றி மாவட்ட உயரதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் நேற்றுக் காலை வந்து அந்த அப்பாவி மக்களுடன் பல மணிநேரம் பேச்சு நடத்தி, தற்போதைய நிலைமையை விளக்கி தங்கியிருந்த இடங்களுக்கே திரும்பிச் செல்லுமாறு கேட்டுக் கொண்டனர்.  அவர்கள் அனைவருக்கும் அதிகாரிகள் உணவு, தண்ணீருக்கு ஏற்பாடு செய்து கொடுத்தனர். பின்னர் அதிகாரிகளின் ஏற்பாட்டின் பேரில் சிறப்பு வாகனங்களில் மீண்டும் அவர்கள் தங்கியிருந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து தலசாரி போலீஸ் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் அஜய் வசாவே கூறுகையில், ‘‘குஜராத் மாநிலத்துடனான எல்லைப் பகுதிக்கு சீல் வைக்கப்பட்டிருந்ததால் மும்பையில் வேலை செய்யும் குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பால்கர் மாவட்டத்தில் உள்ள அச்சாத் கிராமத்தில் சிக்கிக் கொண்டனர். எல்லை கடந்து செல்ல அவர்களுக்கு அனுமதியளிக்க எங்களுக்கு அதிகாரம் இல்லை. உயரதிகாரிகள் வந்து அம்மக்களிடம் நிலவரத்தை கூறி அவர்களை சமாதானப்படுத்தி மீண்டும் அவர்கள் தங்கியிருந்த இடங்களுக்கே திரும்பி செல்லுமாறு கேட்டுக் கொண்டனர்’’ என்றார்.

மூலக்கதை