கண்காணிப்பு! ரயில் தண்டவாளம் வழியாக வெளிமாநிலத்தவர்கள் குறித்து ... கொரோனா தடுப்பு நடவடிக்கை

தினமலர்  தினமலர்
கண்காணிப்பு! ரயில் தண்டவாளம் வழியாக வெளிமாநிலத்தவர்கள் குறித்து ... கொரோனா தடுப்பு நடவடிக்கை

சென்னை : ''ரயில் தண்டவாளம் வழியாக, வெளி மாநிலத்திற்கு செல்வோர், அங்கிருந்து, தமிழகம் வருவோரை கண்காணித்து, தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது,'' என, வருவாய் நிர்வாக ஆணையர், ராதாகிருஷ்ணன் கூறினார்.

சென்னையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை, தீவிரமாக நடைபெற்று வருகிறது. சோழிங்கநல்லுார் மண்டலம், 195வது வார்டு, கண்ணகி நகரில், 23 ஆயிரத்து, 704 வீடுகள் உள்ளன

.கிருமி நாசினி தெளிப்பு


ஒவ்வொரு தொகுப்பு குடியிருப்பும், நான்கு மாடிகள் கொண்டவை. நேற்று, மூன்று குடிநீர் லாரிகள், ஒரு தீயணைப்பு வாகனம் மற்றும் ஏழு கையடக்க கருவி மூலம், ஒரே நேரத்தில், வைரஸ் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒவ்வொரு வீட்டில் உள்ள, ஜன்னல், கதவுகளை மூட, ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, தீயணைப்பு வாகனம் மூலம், குடியிருப்பு சுவர்களில், கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

மேலும், படிகள், கைப்பிடி, நடைபாதை ஆகிய இடங்களில், கையடக்க இயந்திரம் கொண்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. ஆலோசனைவீட்டில் பாதுகாப்பாக இருப்பது; சுகாதாரமாக வைத்திருப்பது போன்றவற்றை வலியுறுத்தும், விழிப்புணர்வு பிரசுரம், வீடுகள் தோறும் வழங்கப்பட்டது.இந்த பணிகளை, பேரிடர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி கமிஷனர், பிரகாஷ், தெற்கு வட்டார துணை ஆணையர், ஆல்பிஜான் வர்கீஸ், அடையாறு துணை ஆணையர், பகலவன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: சமூக இடைவெளி கடைப்பிடிக்க, விழிப்புணர்வு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. ரயில் தண்டவாளம் வழியாக, வெளி மாநிலத்திற்கு செல்வதையும், அங்கிருந்து வருவதையும் தடுக்க, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முதியோருக்கு உதவ, தன்னார்வலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். கொரோனா குறித்து தவறான வதந்தி பரப்புவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

கமிஷனர், பிரகாஷ் கூறியதாவது:தனிமைப்படுத்தப்பட்ட நபர்களின் உடல்நிலையை, தினசரி கேட்டறிகிறோம். தேவையான மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது.மளிகை, காய்கறி கடைகளுக்கு தினசரி செல்லாமல், ஐந்து நாட்களுக்கு தேவையானதை சேர்த்து வாங்குவது நல்லது. தேவையற்ற காரணங்களை கூறி, மக்கள் சாலையில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை