பயனுள்ள ஓய்வு: ரவி சாஸ்திரி வரவேற்பு | மார்ச் 28, 2020

தினமலர்  தினமலர்
பயனுள்ள ஓய்வு: ரவி சாஸ்திரி வரவேற்பு | மார்ச் 28, 2020

புதுடில்லி: ‘‘தற்போது இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைத்துள்ள ஓய்வு மிகவும் பயனுள்ளது,’’ என, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் டோக்கியோ ஒலிம்பிக், ஐ.பி.எல்., உட்பட அனைத்து விளையாட்டு போட்டிகளும் முடங்கியுள்ளன. நாடு முழுவதும் வரும் ஏப். 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஓய்வில் உள்ளனர்.

இதுகுறித்து இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியது: தற்போது கிடைத்துள்ள ஓய்வு வரவேற்கத்தக்கது. ஏனெனில் சமீபத்திய நியூசிலாந்து தொடரின் முடிவில் காயம், உடற்தகுதி போன்ற பிரச்னையால் இந்திய வீரர்கள் மிகவும் சோர்வாக இருந்தனர். எனவே இந்த ஓய்வு பயனுள்ளதாக அமையும் என நம்புகிறேன். கடந்த 10 மாதங்களாக இந்திய வீரர்கள் தொடர்ச்சியாக போட்டிகளில் விளையாடி வருகின்றனர். இதன் பாதிப்பு சமீபத்தில் தெரிந்தது.

கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை தொடருக்காக மே 23ல் இந்தியாவில் இருந்து கிளம்பினோம். இத்தொடருக்கு பின் வெஸ்ட் இண்டீஸ் சென்றோம். இந்திய மண்ணில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக விளையாடினோம். அதன்பின் நியூசிலாந்து சென்றோம். உலக கோப்பை தொடருக்கு பின் நாங்கள் வீட்டில் 10 அல்லது 11 நாட்கள் மட்டுமே இருந்துள்ளோம்.

மூன்று வகையான கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வீரர்களின் நிலமையை எண்ணிப் பாருங்கள். ஒவ்வொரு போட்டிக்கு ஏற்ப உடல் மற்றும் மனதளவில் தயாராவது, பயணம் என, நிறைய உள்ளன. இது கடினமானது. எனவே இந்த ஓய்வை இந்திய வீரர்கள் பயன்படுத்திக் கொள்வர் என நம்புகிறேன்.

நியூசிலாந்தில் இருந்து சரியான நேரத்தில் இந்தியா வந்தடைந்தோம். அதன்பின் தான் விமான நிலையத்தில் பயணிகளிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று குறித்து விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்ப்பது ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களின் கடமை. இதனை கேப்டன் கோஹ்லி, அஷ்வின், ரோகித் உள்ளிட்டோர் சரியாக செய்தனர். இவ்விஷயத்தில் ஒவ்வொரு வீரரும், பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.

இவ்வாறு ரவி சாஸ்திரி கூறினார்.

கேப்டன் கோஹ்லி குறித்து ரவி சாஸ்திரி கூறுகையில், ‘‘இந்திய கிரிக்கெட்டில் கேப்டன் தான் ‘பாஸ்’, இதனை எப்போதும் நம்புவேன். பயிற்சியாளரின் பணி துணிச்சலான, திறமையான வீரர்களை கண்டறிந்து சிறந்த அணியை உருவாக்குவதே ஆகும். கேப்டன் என்பவர் அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும். இதனை கோஹ்லி சரியாக செய்கிறார். உடற்தகுதியிலும் இவர் தான் முன்னோடியாக உள்ளார்,’’ என்றார்.

மூலக்கதை