இந்திய அணிக்கு திரும்புவாரா தோனி: ஹர்ஷா போக்ளே கணிப்பு | மார்ச் 28, 2020

தினமலர்  தினமலர்
இந்திய அணிக்கு திரும்புவாரா தோனி: ஹர்ஷா போக்ளே கணிப்பு | மார்ச் 28, 2020

புதுடில்லி: ‘‘முன்னாள் கேப்டன் தோனி, இந்திய அணிக்கு திரும்புவது கடினம்,’’ என, கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே தெரிவித்துள்ளார்.

முன்னாள் இந்திய கேப்டன் தோனி 38. இதுவரை 90 டெஸ்ட் (4876 ரன்), 350 ஒருநாள் (10,773), 98 சர்வதேச ‘டுவென்டி–20’ (1617) போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர், கடைசியாக கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை (50 ஓவர்) தொடரில் விளையாடினார்.

‘ஐ.பி.எல்., தொடரில் இவரது செயல்பாட்டை அடிப்படையாக கொண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடருக்கு தேர்வு செய்யப்படுவார்,’ என, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியிருந்தார். ஆனால் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலால் ஐ.பி.எல்., தொடர் ஒத்திவைக்கப்பட்டது. தற்போதுள்ள சூழ்நிலையில் ஐ.பி.எல்., தொடர் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் தோனியின் எதிர்காலம் குறித்து விமர்சனம் எழுகின்றன. சமீபத்தில் தோனியின் இளம் வயது பயிற்சியாளர் கேஷவ் பானர்ஜி, ‘ஐ.பி.எல்., தொடர் ரத்தானாலும், ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடருக்கு தேர்வு செய்யப்படுவார்,’’ என, தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்சா போக்ளே கூறியது: எனது கணிப்பின் படி முன்னாள் கேப்டன் தோனி, ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடருக்கு தேர்வு செய்யப்படுவது கடினம். இவரது இந்திய அணி கனவு முடிவுக்கு வந்துவிட்டதாக உணர்கிறேன். ஒருவேளை ஐ.பி.எல்., தொடரில் சிறப்பாக விளையாடினால் இதுகுறித்து யோசிக்கலாம். ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் ஐ.பி.எல்., நடப்பது கேள்விக்குறியாக உள்ளது.

உலக கோப்பை தொடருக்கு வீரர்களின் அனுபவம் முக்கியமாக கருதப்படும். விக்கெட் கீப்பர் இடத்துக்கு ரிஷாப் பன்ட், லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு இடையே போட்டி நிலவுகிறது. இதில் லோகேஷ் ராகுல் சரியான நபராக கருதுகிறேன். இளம் வீரர் ரிஷாப் பன்ட், இன்னும் நிறைய போட்டிகளில் விளையாட வேண்டும்.

இவ்வாறு ஹர்ஷா போக்ளே கூறினார்.

மூலக்கதை