நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 873 ஆக உயர்வு: பலி எண்ணிக்கை 19

தினகரன்  தினகரன்
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 873 ஆக உயர்வு: பலி எண்ணிக்கை 19

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 873 ஆகவும், பலி எண்ணிக்கை 19 ஆகவும் அதிகரித்துள்ளது.  இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நேற்று முன்தினம் 724  ஆகவும், பலி எண்ணிக்கை 17 ஆகவும் இருந்தது. நேற்று காலை 9.30 மணி நிலவரப்படி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 873 ஆக அதிகரித்தது. இவர்களில் 47 பேர் வெளிநாட்டினர். 78 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால், தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 775 ஆக உள்ளது. மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசத்தில் தலா ஒருவர் இறந்ததால் பலி எண்ணிக்கை நேற்று 19 ஆக அதிகரித்தது. இவர்களில் மகாராஷ்டிராவைச் ேசர்ந்த 5 பேரும், குஜராத்தைச் சேர்ந்த 3 பேரும், கர்நாடகாவைச் சேர்ந்த 2 பேரும், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இருவரும், தமிழ்நாடு, பீகார், பஞ்சாப், டெல்லி, மேற்கு வங்கம், ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்தவரும் அடங்குவர். கொரோனா பாதிப்பு அதிகம் பரவாமல் இருக்க, முடக்க காலத்தில் மக்கள் வீட்டுக்குள் இருக்கும்படியும், வெளியிடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றும்படியும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். கடற்படை விமானம் எடுத்து செல்லும் மாதிரிகள்கோவாவில் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. அவர்களின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை புனேவில் உள்ள வைராலஜி தேசிய மையத்தில் சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. முடக்க காலம் அமலில் இருப்பதால், அந்த மாதிரிகள் கோவாவின் ஐஎன்எஸ் ஹன்சா கடற்படை விமான தளத்திலிருந்து டோர்னியர் ரக விமானம் மூலம் புனே கொண்டு செல்லப்பட்டது. இந்தியாவில் ஒரே நாளில் 149 பேருக்கு கொரோனா  பாதிப்புஇந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 149 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகி வருவது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் உலகளவில் இந்த வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று 28,000ஐ தாண்டியதும் குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை