கொலை, கொள்ளை குறைந்து போச்சு... கொரோனாவால் அதிகரித்த ஆன்லைன் குற்றங்கள்

தினகரன்  தினகரன்
கொலை, கொள்ளை குறைந்து போச்சு... கொரோனாவால் அதிகரித்த ஆன்லைன் குற்றங்கள்

கொரோனாவால் ஏப்ரல் 14 வரை நாடு முழுவதும் முடக்கப்பட்டு இருக்கிறது. சாலைகள் வெறிச்சோடிக்காணப்படுகின்றன. அனைவரும் வீட்டில் இருப்பதால் கொலை, கொள்ளை போன்ற சமூக விரோத செயல்கள் குறைந்து விட்டன என நீங்கள் நினைக்கலாம். ஆனால் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் செய்யும் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்துவிட்டன. இந்த நேரத்தில் போலீசார் வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்புகள்: ஆன்லைன் மோசடி: மோசடி செய்யும் நபர்கள் ஆன்லைனில் போலியான வெப்சைட் மற்றும் இணைய வணிகதளம், சமூகவலைத்தளம் மற்றும் இமெயில் ஆகியவற்றை உருவாக்கி வைத்துள்ளனர். அதன் மூலம் பொருட்களை விற்பனை செய்வதாகவும், மருந்து பொருட்களை கொண்டு வருவதாகவும் அறிவிப்பு செய்து ஆன்லைன் வங்கி கணக்கில் இருந்து பணத்தை சுருட்டுகின்றனர். கடந்த இரண்டு மூன்று தினங்களில் இது அதிகரித்துள்ளது. எனவே பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும். தொலைபேசி வழி மோசடி: கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட உறவினர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது சிகிச்சைக்கு பண உதவி வேண்டும் என்றும் சிலர் தொலைபேசி மூலம் உதவி கேட்டு மோசடி செய்து வருகிறார்கள். வலையில் வீழ்த்துதல்: இ மெயில் மற்றும் கொரோனா தொடர்பான லிங்க் ஆகியவற்றை செல்போன் மூலம் அனுப்பும் சிலர், சுகாதார அதிகாரிகள் போல் நடித்து அந்த வெப்சைட்டுக்குள் நம்மை நுழைய வைப்பார்கள். அதன்பின்னர் நமது இமெயில் மற்றும் பாஸ்வேர்டை தெரிந்து கொண்டு அனைத்து தகவல்களையும் பெற்று நமது வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடுவார்கள்.எதை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது?* சந்தேகப்படும்படியான இமெயில் கணக்குகளை திறக்கக்கூடாது. அதோடு ஆதாரம் இல்லாத கொரோனா வைரஸ் சம்பந்தப்பட்ட லிங்குகள் சமூக வலைத்தளத்தில் வந்தால் அதற்குள் செல்லக்கூடாது.*  உங்கள் சமூக வலைத்தளம் மற்றும் வங்கி கணக்கின் பாஸ்வேர்டு மிகுந்த வலுவானதாக அமைக்க வேண்டும். மேலும் அதனுள் நுழைய ஓடிபி போன்று உறுதிப்படுத்தும் தன்மை இடம் பெற வேண்டும்.*  உங்களுடைய சாப்ட்வேரை அடிக்கடி மேம்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக ஆன்டிவைரஸ் சாப்ட்வேரை அடிக்கடி அப்டேட் செய்ய வேண்டும்.* உங்கள் குழந்தைகளுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் எப்படி ஆன்லைனை பாதுகாப்பாக உபயோகிக்க வேண்டும் என்று கற்றுக்கொடுங்கள்.* அறக்கட்டளைக்கு பணம் செலுத்தும் முன் அதனுடைய அங்கீகாரத்தை உறுதிப்படுத்திக்கொண்டு பணம் செலுத்த வேண்டும்.* இதையெல்லாம் தாண்டி நீங்கள் ஏமாற்றப்பட்டால் உடனடியாக போலீசில் புகார் கொடுக்க வேண்டும்.

மூலக்கதை