5 நிமிடங்களில் கண்டறியும் கருவி: அமெரிக்க மருந்து துறை ஒப்புதல்

தினகரன்  தினகரன்
5 நிமிடங்களில் கண்டறியும் கருவி: அமெரிக்க மருந்து துறை ஒப்புதல்

அமெரிக்காவில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,700 பேர் உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் மிக வேகமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்கா திணறி வருகிறது. இந்நிலையில், அபோட் லேபரட்டரிஸ் என்ற நிறுவனம் கொரோனா இருக்கிறதா என்பதை விரைவு சோதனை மூலம் கண்டறியும் கருவியை கண்டுபிடித்துள்ளது. இதனை சோதனைக்கு பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து துறை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து அந்நிறுவனத்தின் துணைத் தலைவர் ஜான் ரெல்ஸ் கூறுகையில், ``இது ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சி. இதன் மூலக்கூறு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கொரோனா தொற்று பற்றிய பாசிடிவ் முடிவுகளை 5 நிமிடங்களிலும், நெகடிவ் முடிவுகளை 13 நிமிடங்களிலும் கண்டறிய முடியும். இதனை எந்த மருத்துவமனையிலும் செய்து கொள்ள முடியும். அடுத்த வாரம் முதல் நாளொன்றுக்கு 50 ஆயிரம் சோதனைகளை மேற்கொள்ள தேவையான கருவிகள் உற்பத்தி செய்யப்பட உள்ளது. தற்போதைக்கு அபோட் நிறுவனத்தின் பெயரிலேயே இந்த சோதனைகள் செய்து கொடுக்கப்பட உள்ளது,’’ என்றார்.

மூலக்கதை