இந்த போரிலும் வெல்வோம்...: கபில்தேவ் உறுதி

தினகரன்  தினகரன்
இந்த போரிலும் வெல்வோம்...: கபில்தேவ் உறுதி

புதுடெல்லி: கொரோனா தொற்றுக்கு எதிரான போரிலும் நாம் கட்டாயம் வெல்வோம் என்று இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியுள்ளார். கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க ‘எல்லோரும் வீட்டிலேயே இருங்கள்’ என்று மட்டும்  பிரபலங்கள் எல்லாம் ‘எச்சரிக்கை’ செய்துக்  கொண்டிருக்கிறார்கள். கபில்தேவ் கூடுதலாக நம்பிக்கையும் தரும் விதத்தில் சொல்லியிருக்கிறார்.இது குறித்து அவர் கூறியதாவது: நீங்கள் வீட்டிலேயே இருங்கள்.  உயிருக்கு ஆபத்தான இந்த வைரசை எதிர்த்து போராடும் அரசுக்கு நாம் செய்யும் குறைந்தபட்ச உதவிதான் இது. வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டுமா என்று எதிர்மறையாக யோசிக்காமல், வீட்டுக்குள் இருப்பதால் கிடைக்கும் நன்மைகளை பாருங்கள். இந்த சவாலான சூழ்நிலையை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் குடும்பம் என்ற உலகம்  வீட்டுக்குள்ளேயே இருப்பதை உணருங்கள்.  புத்தகம், தொலைக்காட்சி, இசை என்று பொழுதை கழியுங்கள். அதைவிட முக்கியம் உங்கள் குடும்பத்தினரிடம் பேசுவதுதான் இன்னும் சிறந்த பொழுதுபோக்கு. இப்போது நான் வீட்டை துடைக்கிறேன். தோட்டத்தை சுத்தம் செய்கிறேன்.  எனது சிறிய தோட்டம் இப்போது கோல்ப் மைதானமாக இருக்கிறது. அவ்வப்போது நானும் சமைக்கிறேன். அந்தகாலத்தில்  என் மனைவி ரோமியிடம் கற்றுக் கொண்டதை இப்போது அமல்படுத்துகிறேன். எனது குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடுகிறேன். நான் எதையும் நேர்மறையாக பார்க்கிறேன். ஒரு போட்டியில் சதமடித்துவிட்டு அடுத்த போட்டியில் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்திருக்கிறேன். ஒரு போட்டியில் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் இருந்து, அடுத்த போட்டியில் சிறப்பாக விக்கெட்களை வீழ்த்தியிருக்கிறேன். நெருக்கடியான சூழ்நிலைகளில் மனித இனம் எப்படி போராடி இருக்கிறது என்பதை படித்திருக்கிறேன். வலிமை என்பது இந்திய பண்பாட்டின் ஒரு அங்கம்.  அரசு, மருத்துவர்களின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருப்பதின் மூலம் கொரோனா தொற்றுக்கு எதிரான இந்த போரில் கட்டாயம் நாம் வெல்வோம் என்று எனக்கு தெரியும்.இவ்வாறு கபில்தேவ் கூறியுள்ளார்.

மூலக்கதை