ஈரானில் மது குடித்தால் கொரோனா பரவாது என்ற வதந்தியை நம்பி, எரி சாராயம் குடித்த 300 பேர் பலி ; 5 வயது குழந்தையையும் குடிக்க வைத்து கொன்ற சோகம்

தினகரன்  தினகரன்
ஈரானில் மது குடித்தால் கொரோனா பரவாது என்ற வதந்தியை நம்பி, எரி சாராயம் குடித்த 300 பேர் பலி ; 5 வயது குழந்தையையும் குடிக்க வைத்து கொன்ற சோகம்

டெஹ்ரான் : மது குடித்தால் கொரோனா வைரஸ் பரவாது அல்லது குணமாகும் என்ற வதந்தியை நம்பி, எரி சாராயம் குடித்த 300 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.கொரோனாவால் அதிகம் பேர் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான ஈரானில்தான் இந்த அநியாயம் நடந்துள்ளது. ஈரான் நாட்டின் 31 மாகாணங்களையும், COVID-19 தாக்கி சீர்குலைத்துள்ளது. இந்த நோயால், 2,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 29,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே கொரோனா வைரஸ் பரவும் அச்சத்தின் காரணமாக, போதுமான விழிப்புணர்வு மக்களிடம் இல்லாததாலும், சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகளை நம்பியதாலும்  ஈரான் மிகப்பெரிய சிக்கலை சந்தித்துள்ளது.அதாவது, சமூக வலைத்தளங்களில் மது குடித்தால் கொரோனா நம்மை தாக்காது என்று தகவல்கள் பரவி நிலையில், அதனை நம்பிய ஈரான் மக்கள் ஏராளமானோர் மெத்தனால் கலந்த எரிசாராயத்தை குடித்துள்ளனர். இதில் மிகவும் சோகமான செய்தி என்னவென்றால், 5 வயது குழந்தைக்கும் கூட அவரது பெற்றோர்களே எத்தனால் கலந்த எரிசாராயத்தை கொடுத்ததுதான்.இந்த நிலையில் கொரோனா வைரசை தடுக்க எரிசாராயத்தை குடித்ததில் 300 பேர் வரை பலியாகி இருப்பதாக ஈரான் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. எரி சாராயத்தை அதிக அளவில் உட்கொண்டதால், மெத்தனால் உடலில் கலந்து, கண்பார்வையின்மை, கல்லீரல் பாதிப்பு மற்றும் இறப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், மேலும் மது அருந்திய ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஈரான் நாட்டில் மது தடை செய்யப்பட்ட ஒன்று என்பதனால் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் எரிசாராயத்தை அவர்கள் அனைவரும் குடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே இதே போன்ற சம்பவம் ஈரானில் இம்மாத தொடக்கத்தில் நடந்துள்ளது. ஆல்கஹால் குடித்தால் கொரோனா வைரஸ் குணமாகும் என்ற வதந்தியை நம்பி, எரி சாராயம் குடித்த 27 பேர் பரிதாபமாக பலியாகினர்.

மூலக்கதை