‘தல’ வருவார்...தரிசனம் தருவார்: தோனி பயிற்சியாளர் நம்பிக்கை | மார்ச் 27, 2020

தினமலர்  தினமலர்
‘தல’ வருவார்...தரிசனம் தருவார்: தோனி பயிற்சியாளர் நம்பிக்கை | மார்ச் 27, 2020

கோல்கட்டா: ‘‘ஒருவேளை ஐ.பி.எல்., தொடர் ரத்து செய்யப்பட்டாலும், ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடருக்கு தோனி தேர்வு செய்யப்படுவார். இது, அவரது கடைசி வாய்ப்பு,’’ என, பயிற்சியாளர் கேஷவ் ரஞ்சன் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

முன்னாள் இந்திய அணி கேப்டன் தோனி 38. வெற்றிக் கேப்டனாக வலம் வந்த இவர், இந்தியாவுக்கு மூன்று வித உலக கோப்பை (2007ல் ‘டுவென்டி–20’, 2011ல் ஒருநாள், 2013ல் சாம்பியன்ஸ் டிராபி), சென்னை அணிக்கு 3 ஐ.பி.எல்., கோப்பை (2010, 2011, 2018) பெற்றுத் தந்தார். கடந்த ஆண்டு மான்செஸ்டரில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான உலக கோப்பை (50 ஓவர்) அரையிறுதிக்கு பின் சர்வதேச போட்டியில் விளையாடவில்லை. இதனால் 13வது ஐ.பி.எல்., தொடருக்கு பின் ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்றால் ஐ.பி.எல்., தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தோனியின் இளம் வயது பயிற்சியாளர் கேஷவ் ரஞ்சன் பானர்ஜி கூறியது: தற்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் ஐ.பி.எல்., தொடர் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒருவேளை இத்தொடர் ரத்து செய்யப்பட்டாலும், ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரில் தோனிக்கு கடைசி வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கிறேன்.

கடைசியாக சென்னையில் நடந்த பயிற்சி முகாமில் தோனியிடம் பேசினேன். அவரது பெற்றோர்களுடன் தொடர்பில் உள்ளேன். இவர், சர்வதேச போட்டிகளில் விளையாடக் கூடிய முழு உடற்தகுதி பெற்றுள்ளார். கடந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கு பின் எவ்வித போட்டியிலும் விளையாடாவிட்டாலும் இவரது அனுபவம் சர்வதேச போட்டிக்கு தயாராக உதவும்.

இவ்வாறு கேஷவ் ரஞ்சன் பானர்ஜி கூறினார்.

மூலக்கதை