‘நாட்டுக்கு நல்லது செய்யுங்க’ * ரோகித் சர்மா வேண்டுகோள் | மார்ச் 26, 2020

தினமலர்  தினமலர்
‘நாட்டுக்கு நல்லது செய்யுங்க’ * ரோகித் சர்மா வேண்டுகோள் | மார்ச் 26, 2020

மும்பை: ‘‘இப்போதுள்ள சூழலில் நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைத்தீர்கள் என்றால், வீட்டில் தனித்து இருங்கள். அது போதும்,’’ என ரோகித் சர்மா தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரோகித் சர்மா 32. கணுக்கால் காயம் காரணமாக நியூசிலாந்து தொடரில் இருந்து பாதியில் நாடு திரும்பினார். ஐ.பி.எல்., தொடரில் நான்கு கோப்பை வென்ற மும்பை அணி கேப்டனாக உள்ளார்.

இத்தொடர் குறித்து ரோகித் சர்மா கூறியது:

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) அனைவரது நலனையும் கருத்தில் கொள்கிறது. ஐ.பி.எல்., என்பது அணி நிர்வாகிகள், ரசிகர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் தொடர்பானது. எல்லோரும் பாதுகாப்பான முறையில் கிரிக்கெட்டை ரசிக்க தேவையான நடவடிக்கைகள் பி.சி.சி.ஐ., எடுக்கும். இப்போதுள்ள கொரோனா பரவல் குறைந்து நிலைமை சீரடையும் பட்சத்தில் இத்தொடர் நடக்க வாய்ப்புள்ளது. 

சோகமான நிகழ்வு

மற்றபடி கடந்த 2011ல் உலக கோப்பை இந்திய அணியில் இடம் பெற முடியாமல் போனது எனது சோகமான நிகழ்வு. இந்தியாவில் நடந்த இத்தொடரின் பைனல் எனது சொந்தமண்ணில் நடந்தது. இருப்பினும் இது எனது தவறு தான். நான் சிறப்பாக விளையாடி இருந்தாலும் அணியில் இடம் பெற்றிருக்கலாம்.

நல்லது செய்யுங்க

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறது. இப்போதுள்ள சூழலில் நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைத்தால், வீட்டில் தனித்து இருங்கள். சமூக இடைவெளி என்பது மிக முக்கியம். மக்கள் பெரும்பாலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வேண்டும் என அதிகமாக வெளியில் செல்கிறார்கள். அரசின் உத்தரவை எல்லோரும் பின்பற்றுவர் என நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை