காலை 10 மணிக்கு செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கிறார் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ்: EMI உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியிட வாய்ப்பு?

தினகரன்  தினகரன்
காலை 10 மணிக்கு செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கிறார் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ்: EMI உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியிட வாய்ப்பு?

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்று வரை 22,200 பேர் உயிரிழந்த நிலையில், 24 மணி நேரத்தில் 2 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உலகளவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24,071 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு இதுவரை 5 லட்சத்து 31 ஆயிரத்து 799 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 1 லட்சத்து 17 ஆயிரத்து 446 பேர்  குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.இந்நிலையில், பிரதமர் மோடி, கடந்த 24ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் 21 நாட்கள் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அறிவித்தார். இதனால், அத்தியாவசிய சேவைகள் அளிக்கும் நிறுவனங்கள் தவிர, ஏராளமான  நிறுவனங்கள் தொழிற்சாலைகள் மூடப்பட்டு கிடக்கின்றன. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறைகள், ஆட்டோமொபைல் உற்பத்தி, ஜவுளி உற்பத்தி, தகவல் தொழில்நுட்பத்துறை நிறுவனங்கள், நகை விற்பனை, உணவு தொழில்கள், சுற்றுலா  துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. வணிக வளாகங்கள், ஓட்டல்கள் மூடப்பட்டு கிடக்கின்றன. இதனால் நாட்டின் பொருளாதாரம் மேலும் மோசமான நிலையை அடைந்து வருகிறது. வேலைவாய்ப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. அன்றாட தொழிலாளர்கள்  நிலை பரிதாபமாக மாறியுள்ளது. இதற்கிடையே, நிதியுதவி திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்த நிதியமைச்சர் தலைமையில் சிறப்பு குழுவை பிரதமர் நரேந்திரமோடி அமைத்து உத்தரவிட்டார். கூட்ட ஆலோசனை முடிந்த நிலையில், 1.7 லட்சம் கோடி  மதிப்பிலான நிதியுதவி திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார். அப்போது, ஏழைகள் ஒருவர் கூட பசியோடு இருக்கக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனக்கூறி மருத்துவர்கள்,  செவிலியர்கள் மற்றும் அரசு சுகாதார பணியாளர்களுக்கு  மருத்துவ காப்பீடு, 80 கோடி மக்களுக்கு தலா 5 கிலோ அரிசி மற்றும் 1 கிலோ பருப்பு , விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000, 100 நாள் வேலை கூலி 202 ஆக உயர்வு, மூத்த குடிமக்கள்,  கணவனை இழந்தவர்கள், மாற்று திறனாளிகளுக்கு 1,000 கருணைத்தொகை, 20.5 கோடி பெண்களுக்கு, அடுத்த 3 மாதங்களுக்கு மாதம் 500, 8.3 கோடி குடும்பங்களுக்கு அடுத்த மூன்று மாதங்களுக்கு இலவச சமையல் காஸ் உள்ளிட்ட பல்வேறு  அறிவிப்புகளை வெளியிட்டார்.நேற்று மத்திய நிதியமைச்சர் செய்தியாளர்களை சந்தித்த நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் காலை 10 மணியளவில் செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கவுள்ளார். மத்திய அரசு மக்களுக்கு பல்வேறு அறிவிப்புகள் வெளியிட்ட  நிலையில் வங்கி தொடர்பான பல்லேறு அறிவிப்புகளை வெளியிட வாய்ப்புள்ளது. EMI உள்ளிட்ட வங்கி தொடர்பான மாத கட்டணத்தை தள்ளி வைக்கக்கோரி தொடர்ந்து பொதுமக்கள் அறிவுறுத்திவரும் நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர்  அறிவிப்பு பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை