அத்துமீறல்! புழல் ஏரியில் நடைப்பயிற்சி.... பொதுப்பணித்துறையினர் பூட்டு

தினமலர்  தினமலர்
அத்துமீறல்! புழல் ஏரியில் நடைப்பயிற்சி.... பொதுப்பணித்துறையினர் பூட்டு

சென்னை:தடையை மீறி, புழல் ஏரியில் நடைப்பயிற்சி செய்பவர்களை தடுக்க, நுழைவாயிலுக்கு, பூட்டு போடப்பட்டுள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியின், உபரிநீர் வெளியேற்றும் மதகுகள் செங்குன்றத்தில் உள்ளன. இங்கிருந்து, புழல் நீரேற்றும் நிலையம் வரை செல்வதற்கு, ஏரியின் மேல் பகுதியில், தார்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சாலையில், அதிகாலை மற்றும் மாலை நேரங்களில், செங்குன்றம், புள்ளிலைன், வடகரை, கிராண்ட்லைன், காவாங்கரை, புழல் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், நடைப்பயிற்சி செல்வது வழக்கம். இதற்காக, ஜி.என்.டி.,சாலையில் உள்ள ஏரியின் நுழைவாயில் கதவுகள்திறந்து வைக்கப்பட்டிருக்கும். கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என, பொதுமக்களுக்கு பிரதமர் மோடி, முதல்வர் இ.பி.எஸ்., அறிவுறுத்தி உள்ளனர்.

தமிழகத்தில், 144 தடை உத்தரவும் அமலில் உள்ளது. அதை மீறி, பலரும் நேற்று காலை, ஏரியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டனர். இதில், 50 வயதை கடந்தவர்கள் அதிகம். இத்தகவல், பொதுப்பணித்துறையினர் கவனத்திற்கு சென்றது. இதையடுத்து, அனைவரையும் பொதுப்பணித்துறை ஊழியர்கள் எச்சரித்து வெளியேற்றினர். பின்னர், இருசக்கர வாகனங்கள் கூட செல்லாதபடி, நுழைவாயில் கதவுகளுக்கு பூட்டு போடப்பட்டது.

மூலக்கதை