திருப்பதி கருவறையில் விளக்கு அணைந்ததா? தலைமை அர்ச்சகர் விளக்கம்

தினகரன்  தினகரன்
திருப்பதி கருவறையில் விளக்கு அணைந்ததா? தலைமை அர்ச்சகர் விளக்கம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் கருவறையில் விளக்கு அணைந்ததா என்பது குறித்து தேவஸ்தான தலைமை அர்ச்சகர் விளக்கம்  அளித்துள்ளார்.  திருப்பதி ஏழுமலையான் கோயில் கருவறையில் உள்ள விளக்கு அணைந்து விட்டதாக நேற்று சமூக வலைதளங்களில்  காட்டுத்தீப்போல் வதந்தி பரவியது. இதனால் ஆண்களுக்கு ஆபத்து எனவும் தகவல் பரவியதால்  மாநிலம் முழுவதும் சர்ச்சை ஏற்பட்டது. இதுகுறித்து தேவஸ்தான தலைமை அர்ச்சகர் வேணுகோபால தீட்சிதர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா வைரஸ் காரணமாக  பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க, மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கையால் சுவாமி தரிசன அனுமதி நிறுத்தப்பட்டது. ஆனால் ஏழுமலையானுக்கு நடைபெறும் சுப்ரபாதம் முதல் ஏகாந்த சேவை வரை அனைத்தும் வழக்கம்போல் நடந்து வருகிறது. தினந்தோறும் பகல் 12  மணிக்கு தேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறது. இந்த சேவை தேவஸ்தான தொலைக்காட்சியிலும்  நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்நிலையில், ஏழுமலையான் கருவறையில் விளக்கு அணைந்ததாக சமூக வலைதளங்களில் வரும்  தகவல்கள் முற்றிலும் வதந்தியே. இதனை யாரும் நம்பவேண்டாம். அதுபோன்ற சம்பவம் எதுவும் நடக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.உலக மக்களை காக்க தன்வந்திரி யாகம்உலக மக்களை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து அனைவரையும் ஆரோக்கியத்துடன் காப்பாற்ற வேண்டும் என திருமலை திருப்பதி  தேவஸ்தானம் சார்பில் திருமலை அடுத்த தர்மகிரியில் உள்ள வெங்கடேஸ்வரா வேத பாடசாலையில் 3 நாட்கள் தன்வந்திரி யாகம் நடத்த முடிவு  செய்யப்பட்டது. இதன்படி, நேற்று தொடங்கிய இந்த யாகத்திற்காக சீனிவாசமூர்த்திக்கு 5, தன்வந்தரி மூர்த்திக்கு 1, பிராயச்சித்தத்திற்கு 1 என மொத்தம்  7 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 11 ருத்விக்குகள் பங்கேற்று யாகம் நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை