ஊரடங்கு தடையுத்தரவை மீறி வீட்டைவிட்டு வெளியே வந்தால் கைது: கலெக்டர்களுக்கு கர்நாடக முதல்வர் உத்தரவு

தினகரன்  தினகரன்
ஊரடங்கு தடையுத்தரவை மீறி வீட்டைவிட்டு வெளியே வந்தால் கைது: கலெக்டர்களுக்கு கர்நாடக முதல்வர் உத்தரவு

பெங்களூரு: கர்நாடக மாநிலம் முழுவதும் உள்ள மாவட்டங்களின் எல்லைகளை மூடவும், அரசின் உத்தரவை மீறி வெளியே வருவோரை கைது  செய்யவும் மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். பெங்களூருவில் இருந்து நேற்று முதல்வர் எடியூரப்பா மாநிலம்  முழுவதும் உள்ள மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது: மாநிலம் முழுவதும்  உள்ள அனைத்து மாவட்டங்களின் எல்லைகளை மூடவேண்டும். மூடிய பின் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்ற மாவட்டத்திற்கோ அல்லது,  வீடுகளைவிட்டு காரணமின்றி வெளியில் வருவோரை கைது செய்ய வேண்டும். மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை அதிக  விலைக்கு விற்பனை செய்வதாக புகார் வந்துள்ளது. அதிக விலைக்கு விற்போர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். தனியார் கிளினிக், மருத்துவமனைகளை மூடுவோர் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும், டாக்டர்கள் எக்காரணம் கொண்டும் தேவையின்றி  விடுமுறையில் செல்ல அனுமதிக்கக் கூடாது. வீட்டில் உள்ளவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் உரிய முறையில் கிடைக்க  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும், சுமார் 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை தயார் நிலையில்  வைக்கவேண்டும். வீட்டில் இருப்பதை விட்டு வெளியில் வருவோரை தடுக்க போலீசார் கடுமையான முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.  அதையும் மீறி அரசின் உத்தரவுக்கு எதிராக வெளியில் வருவோரை கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும். இவ்வாறு முதல்வர் எடியூரப்பா  உத்தரவிட்டார்.

மூலக்கதை