கேரளாவில் ஒரே நாளில் 19 பேருக்கு வைரஸ் பாதிப்பு: முதல்வர் பினராய் விஜயன் தகவல்

தினகரன்  தினகரன்
கேரளாவில் ஒரே நாளில் 19 பேருக்கு வைரஸ் பாதிப்பு: முதல்வர் பினராய் விஜயன் தகவல்

திருவனந்தபுரம்: கேரளாவில் நேற்று ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள்  எண்ணிக்கை 138 ஆக உயர்ந்துள்ளது. திருவனந்தபுரத்தில் நேற்று முதல்வர் பினராய் விஜயன் நிருபர்களிடம் கூறியதாவது: கேரளாவில் இன்று  (நேற்று) 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 138 ஆக உயர்ந்துள்ளது. இதில் 12 பேர்  குணமடைந்துள்ளனர். 126 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று (நேற்று) கண்ணூர் மாவட்டத்தில் 9 பேரும், காசர்கோடு, மலப்புரம்  மாவட்டங்களில் தலா 3 பேரும், திருச்சூரில் 2 பேரும், இடுக்கி, வயநாடு மாவட்டங்களில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதுவரை ஒரு  லட்சத்து 20 ஆயிரத்து 3 பேர் வீடு, மருத்துவமனைகளில் கண்காணிப்பில் உள்ளனர். 136 பேர் இன்று (நேற்று) மருத்துவமனைகளில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர். வயநாட்டில் ஒரு பஞ்சாயத்து உறுப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளார். ரேஷன் கார்டு இல்லாமல் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கும் ஆதார் எண்ணை பரிசோதித்து ரேஷன்கடை மூலம் இலவச உணவு தானியங்கள்  வழங்கப்படும். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ  இளைஞர் தொண்டர் படை ஏற்படுத்தப்படும். பஞ்சாயத்துகளில் 200 பேரும்,  நகராட்சிகளில் 500 பேரும், மாநகராட்சிகளில் 750 பேரும் இதில் இருப்பார்கள். 22 முதல் 40 வயதிற்கு உட்பட்டவர்கள் சேர்க்கப்படுவார்கள். தனியாக இருப்பவர்கள், வறுமையில் வாடுபவர்களுக்கு உணவு வழங்க சமூக சமயலறை தொடங்கப்பட்டுள்ளது. வீட்டில் ஏராளமானோர் தனிமையில்  இருப்பதால் அவர்கள் வசதிக்காக பேக்கரி கடைகள் திறக்க அனுமதிக்கப்படும். இன்றைய சூழலில் அத்தியாவசிய பொருட்களின் விலையை கூட்டி விற்பதாக புகார் வந்துள்ளது. இதற்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வங்கிகளில்  விவசாய நகைக்கடனுக்கான காலக்கெடுவை ஜூன் 30 வரை நீட்டிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ரிசர்வ் வங்கி  ஏற்றுக்கொண்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய அரசு திருப்தி தெரிவித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.பிருத்விராஜ் படபிடிப்புக்கு அனுமதிபிரபல மலையாள நடிகர்  பிரித்விராஜ் நடித்து வரும் ‘ஆடு ஜீவிதம்’  என்ற படபிடிப்பு ஜோர்டான்  நாட்டில் உள்ள காதிரம் பாலைவனத்தில் நடந்து  வருகிறது. இந்த படத்தை பிரபல  இயக்குநர் பிளஸி இயக்குகிறார். 58 பேர் அடங்கிய குழுவினர் அங்கு  பணிபுரிகின்றனர். இந்த நிலையில்  ஜோர்டான் நாட்டிலும் கொரோனா  பரவியுள்ளது. இதையடுத்து ஊரடங்கு சட்டம்  அறிவிக்கப்பட்டது. இதனால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. இது  குறித்து தகவல் அறிந்த மத்திய  வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தகவல் கிடைத்தது. அவர் ஜோர்டான்  நாட்டு அதிகாரிகளுடன்  தொடர்பு கொண்டு படப்பிடிப்பு நடத்த அனுமதிக்குமாறு  கேட்டுக்கொண்டார். இதையடுத்து ஏப்ரல் 10ம் தேதி வரை படபிடிப்பு நடத்த  அனுமதி  அளிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை