கொரோனா நோயாளிகளை ஆடு, மாடுகளை போல் அழைத்து செல்லும் பாக்.: ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பீதி

தினகரன்  தினகரன்
கொரோனா நோயாளிகளை ஆடு, மாடுகளை போல் அழைத்து செல்லும் பாக்.: ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பீதி

பாகிஸ்தானில் கொரோனாவால் இதுவரை 1,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 பேர் பலியாகி உள்ளனர். குறிப்பாக, பஞ்சாப்  மாகாணத்தில்தான் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் முக்கியமான மாகாணங்களில் ஒன்றான பஞ்சாப்பில் ராணுவ வீரர்கள்  குடியிருப்பு, ராணுவ பயிற்சி முகாம் உள்ளிட்டவை அமைந்துள்ளன. இதனால், பஞ்சாப்பில் கொரோனா பரவலை தடுக்க அந்நாட்டு ராணுவம் அதிரடி  முடிவு எடுத்துள்ளது.பஞ்சாப்பில் உள்ள அனைத்து கொரோனா நோயாளிகளையும் ஆடு, மாடுகளை போல் கும்பல் கும்பலாக ராணுவ வாகனத்தில்  அடைத்து, ஆக்கிரமிப்பு காஷ்மீரின் மிர்பூர், முசாபராபாத் மற்றும் பலுசிஸ்தானின் கில்ஜித் ஆகிய இடங்களில் உள்ள தற்காலிகமாக கொரோனா  சிகிச்சை மையங்களுக்கு மாற்றி வருகிறது. ஆக்கிரமிப்பு காஷ்மீர், கில்ஜித் இரண்டுமே அரசியல் ரீதியாக பாகிஸ்தானுக்கு முக்கியம் இல்லாத பகுதிகள். எனவே, மொத்த கொரோனா  நோயாளிகளையும் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு மாற்ற திட்டமிட்டுள்ளது.இதன் காரணமாக உள்ளூர் மக்கள் பீதி அடைந்துள்ளனர். பஞ்சாப்பை  சுத்தப்படுத்த ஆக்கிரமிப்பு காஷ்மீரையும், கில்ஜித்தையும் பாகிஸ்தான் அரசு குப்பைத் தொட்டியாக கருதுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.  சாதாரண காய்ச்சலுக்கு கூட முறையான மருத்துவ வசதி இல்லாத இப்பகுதிகளில் கொரோனா நோயாளிகளால் மிகப்பெரிய விபரீதத்தில்  சிக்கியிருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

மூலக்கதை