ஊரடங்கு காலம் முடிந்தாலும் அடுத்த 12 மாதங்களுக்கு சமூக விலகல் கட்டாயம்: நிபுணர்கள் எச்சரிக்கை

தினகரன்  தினகரன்
ஊரடங்கு காலம் முடிந்தாலும் அடுத்த 12 மாதங்களுக்கு சமூக விலகல் கட்டாயம்: நிபுணர்கள் எச்சரிக்கை

கொரோனாவுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் ஊரடங்கை  அமல்படுத்தி வருகின்றன. மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வது மட்டுமே, இந்த வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு இப்போதுள்ள ஒரே வழி.  இதன் அடிப்படையில்தான், மக்களை தனிமைப்படுத்துவதற்காகவே நாடு முழுவதும் 21 நாட்களுக்கு மத்திய அரசு முழு ஊரடங்கு உத்தரவை  அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஊரடங்கு நடவடிக்கையால் கொரோனா வைரஸ் பரவல் குறைந்தாலும், இதன் பாதிப்புகள் அடுத்த 6 மாதம்  முதல் ஓராண்டு வரை நீடிக்கும் என்று சர்வதேச பல்கலைக் கழகங்களை சேர்ந்த நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இது குறித்து கலிபோர்னியாவில் உள்ள  ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தின் பேராசிரியர்கள் பீட்டர் டீமெர்ஸோ, ஹானோ லுஸ்டிக், அமித் சேரு ஆகியோர் அளித்துள்ள பேட்டியில்,  ‘‘ஊரடங்கு உத்தரவு மூலம் மக்களை தனிப்படுத்துவதால் கொரோனா வைரஸ் பரவுவது குறையும். ஆனால், இது மட்டும் போதாது. பாதிக்கப்பட்டவருக்கு தரும் நோய் தடுப்பு மருந்துகளால் மட்டும், இந்த நோய் மேலும் பரவாமல் கட்டுப்படுத்த  முடியும். சிறப்பான மருத்துவ சிகிச்சைகள் தரப்பட்டால் இந்த நோயை வெற்றிகொள்ள முடியும். அதற்கான நேரடி மருந்து இப்போது இல்லை என்பது  தான் பெரிய குறை. அதனால், அடுத்த 6 முதல் 12 மாதங்களில் உலகில் 40 சதவீத மக்களை இந்த நோய் தாக்கக் கூடும். எனவே, தற்போது நமக்கு  கிடைத்துள்ள நேரத்தை வீணாக்காமல், சிகிச்சை தரும் மருத்துவமனைகளையும், வார்டுகளையும் அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது,’’  என்று கூறியுள்ளனர். அவர்கள் மேலும் கூறுகையில், ‘‘ சீனாவில் கடைபிடிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடு, அந்த நாட்டை கொரோனாவில் இருந்து  மீள செய்துள்ளது. ஆனால், அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் இந்த கட்டுப்பாடுகள் பெரியளவில் பயனை தரவில்லை. கொரோனாவுக்கு உரிய  மருந்து கண்டுபிடிக்கும் வரை சமூக விலகல் முறையை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்,’’ என்றனர்.

மூலக்கதை