திருப்பூரில் அத்தியாவசிய பொருட்கள் வீடு தேடி வரும்! கலெக்டரின் முயற்சியால் குழு அமைப்பு

தினமலர்  தினமலர்
திருப்பூரில் அத்தியாவசிய பொருட்கள் வீடு தேடி வரும்! கலெக்டரின் முயற்சியால் குழு அமைப்பு

திருப்பூர்:மக்களுக்கு, அத்தியாவசிய பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்கவும், விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளவும், கலெக்டரின் முயற்சியால், கொரோனா தடுப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது.'கொரோனா'வால், அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி, மக்களுக்கு கிடைக்கவும், தேவையெனில், 'டோர்டெலிவரி' செய்யவும், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சிறப்பு வசதிகளை செய்துள்ளது.
சமூகவலை தளம் வாயிலாக, பசுமை ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பினரை ஒருங்கிணைத்து, 'கொரோனா தடுப்புக்குழு'வை உருவாக்கியிருக்கிறார் திருப்பூர் கலெக்டர்.திருப்பூரில் உள்ள, நுாற்றுக்கும் அதிகமான அமைப்புகளின், இளைஞர்கள் இணைந்து, 'கொரோனா' தடுப்பு குழுவாக அவதாரம் எடுத்துள்ளனர். மாவட்ட நிர்வாகம், இக்குழுவை அங்கீகாரம் அளித்து, தகுந்த வசதிகளையும் செய்து கொடுத்துள்ளது.வீடுகளில் முடங்கியுள்ளவர்கள், போனில் ஆர்டர் செய்தால், 'டோர் டெலிவரி' கிடைக்கும்; அல்லது மாலையில் சென்று, மளிகை பொருட்களை எடுத்து செல்லலாம்.
கலெக்டர் விஜய கார்த்தி கேயன் கூறியதாவது:வீடுகளில் உள்ள மக்களுக்கு, அத்தியாவசிய பொருள் தங்கு தடையின்றி சென்றடைய வேண்டும் என்ற நோக்கில், 'கொரோனா' தடுப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழு, ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு குழு, 'கொரோனா' தடுப்பு விழிப்புணர்வுக்காக, 'மீம்ஸ்' மற்றும் 'வீடியோ'க்களை தயாரித்து மக்களுக்கு பரப்பும்.இரண்டாவது குழு, மொத்த மளிகை பொருள் விற்பனையாளர், சிறு மளிகை கடைகளுக்கு, பொருட்கள் அனுப்பும் பணியை கண்காணித்து உதவும். மூன்றாவது குழு, விவசாயிகளிடம் சென்று, காய்கறிகளை வாங்கி, 'டிபார்ட்மென்ட்' ஸ்டோர் மூலமாக, மக்களின் வீடுகளுக்கு கொண்டு சேர்க்கும்.
இதே குழு, மக்களுக்கான மளிகை பொருட்களை, 'டிபார்ட்மென்ட் ஸ்டோர்' வாயிலாக, 'டோர் டெலிவரி' செய்யவும் ஏற்பாடு செய்துள்ளது.'டோர் டெலிவரி' இல்லாத பகுதிகளில், பொதுமக்கள் 'போன்' மூலம் ஆர்டர் செய்தால், மளிகை கடைகள் ஆர்டர் பெற்று, பார்சல் கட்டி வைப்பர். சம்பந்தப்பட்ட நபர் , மாலையில் சென்று, பணத்தை கொடுத்து பார்சலை எடுத்து வரலாம். இதை, நான்காவது குழு கண்காணித்து நடத்தும்.ஐந்தாவது குழுவினர், விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை மேற்கொள்வர்.
அதாவது, மளிகை கடைகள், பால் விற்பனைக்கூடம், மருந்துகடைகள் முன், வெள்ளை கோடு வரைந்து, சமூக விலகலுடன் மக்கள் வரிசையில் சென்று, பொருட்களை வாங்குவது, தண்ணீர் மற்றும் சோப்பு வைத்து, பொதுமக்கள் கையை கழுவிவிட்டு வந்து, பொருட்களை வாங்கும் விழிப்புணர்வு பணிகளை, ஐந்தாவது குழு கண்காணிக்கும்.
இக்குழுவினர், சமூக வலைதளங்கள் வாயிலாக, மக்களையும், வியாபாரிகளையும், விவசாயிகளையும் ஒருங்கிணைப்பர். தங்குதடையின்றி இயங்க, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வாகனங்களுக்கு, 'பாஸ்' வழங்கப்படும். கொரோனா தடுப்பு குழுவினருக்கும், அடையாள அட்டை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு, கலெக்டர் கூறினார்.

மூலக்கதை