சரியான திசையில் முதல் படி: கொரோனா பாதிப்புக்காக மத்திய அரசு அறிவித்துள்ள நிவாரணத் திட்டங்களுக்கு ராகுல்காந்தி பாராட்டு

தினகரன்  தினகரன்
சரியான திசையில் முதல் படி: கொரோனா பாதிப்புக்காக மத்திய அரசு அறிவித்துள்ள நிவாரணத் திட்டங்களுக்கு ராகுல்காந்தி பாராட்டு

டெல்லி: கொரோனா பாதிப்புக்காக மத்திய அரசு அறிவித்துள்ள நிவாரணத்திட்டங்களுக்கு ராகுல்காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார். சரியான திசையில் எடுக்கப்பட்ட முதல் நடவடிக்கை என்று அவர் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். மேலும் விவசாயிகள், தொழிலாளர்கள், தினக்கூலி தொழிலாளிகள் ஆகியோருக்கு நாடு கடன்பட்டுள்ளது என் அவர் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் 192 நாடுகளுக்கும் மேல் கொரோனா வைரஸ் பரவி மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 4,22,566-க்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால்  உயிரிழந்தோர் எண்ணிக்கை உலகளவில் 21,200 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரசால் நேற்று வரை 12 பேர் பலியான நிலையில், மேலும் 3 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு 50 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்படும். மக்களுக்கு 5 கிலோ கோதுமை அல்லது அரிசி அடுத்த 3 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும். 8.3 கோடி குடும்பங்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு இலவச கேஸ் வழங்கப்படும். விதவைகள், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் உதவிகள் வழங்கப்படும். முறைசாரா தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் கூடுதலாக வழங்கப்படும். 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சம்பளம் 182 ரூபாயிலிருந்து ரூ.202 ஆக உயர்த்தப்படும். தொழிலாளர்கள் பி.எப் நிதியிலிருந்து 75 சதவீத நிதி அல்லது மூன்று மாத ஊதியம் இதில் எது குறைவோ அதனை முன்பணமாக பெற்றுக் கொள்ளலாம் என்பன உள்ளிட்ட பல்வேறு முக்கிய சலுகைகளை அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பிற்கு ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது; நிதி உதவித் தொகுப்பின் இன்று அரசாங்க அறிவிப்பு சரியான திசையில் முதல் படியாகும். இந்தியா தனது விவசாயிகள், தினசரி ஊதியம் பெறுபவர்கள், தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு கடன்பட்டிருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை